பாஜகவில் இணையும் வக்கீல் பால் கனகராஜ்
தமிழக பாஜக தலைவராக எல்.முருகன் அவர்கள் பொறுப்பேற்றதில் இருந்து மாற்றுக் கட்சியில் இருந்து பாஜகவில் இணையும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த நிலையில் தற்போது ஒரு கட்சியின் தலைவரே பாஜகவில் இணையவுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
சென்னை ஐகோர்ட் வழக்கறிஞர் சங்க தலைவராக இருப்பவரும் தமிழ் மாநில கட்சி என்ற கட்சியை நடத்தி வந்தவருமான வழக்கறிஞர் பால் கனகராஜ் என்பவர் பாஜகவில் இணைய உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. நாளை அவர் பாஜகவில் எல்.முருகன் தலைமையில் இணைய உள்ளதாகவும் அதற்கான இணைப்பு விழா குறித்த ஏற்பாடு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது
சென்னை ஹைகோர்ட் வழக்கறிஞர் சங்க தலைவராக இருக்கும் பால்.கனகராஜ் அனுபவம் வாய்ந்தவர் என்றும் நிச்சயம் அவர் பாஜகவுக்கு பயனுள்ளவராக இருப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எந்த பிரச்சனையாக இருந்தாலும் அதில் தீவிரமாக செயல்பட கூடியவர் என்றும் குறிப்பாக சட்ட ரீதியான பிரச்சனைகளுக்கு இவரது அனுபவம் பாஜகவுக்கு நிச்சயம் கை கொடுக்கும் என்றும் கூறப்படுகிறது
ஏற்கனவே வக்கீல் பால்கனகராஜ் அவர்கள் திமுகவின் வழக்கறிஞர் சங்கத் தலைவராக இருந்தவர் என்பதும் அதன் பின் அதிலிருந்து விலகி 2015 ஆம் ஆண்டு தமிழ் மாநில கட்சி என்ற புதிய கட்சியை தொடங்கி ஆர்கே நகர் தேர்தலில் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் ஜெயலலிதா மறைவிற்குப் பின்னர் ஆர்கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிட திட்டமிட்டிருந்ததாகவும் ஆனால் திடீரென ஓபிஎஸ் வேட்பாளர் மதுசூதனன் அவர்களுக்கு ஆதரவு அளிக்கும் முடிவை எடுத்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் வழக்கறிஞர் பால் கனகராஜ் பாஜகவில் இணைய உள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது