பெரிய நடிகர்கள் படம் வெளியாகும்போதெல்லாம் பிரச்சனைகள் ஏற்படுவது என்பது தற்போது கோலிவுட்டில் சகஜமாகிவிட்டது. குறிப்பாக பெரிய நடிகர்கள் அரசியலுக்கு வந்துவிடக்கூடாது என்பதற்காக அரசியல்வாதிகள் அவர்கள் படம் வெளியாகும்போதெல்லாம் பிரச்சனை ஏற்படுத்துகின்றனர். பாபா' படத்தின்போது ரஜினிகாந்த், 'விஸ்வரூபம்' படத்தின்போது கமல்ஹாசன், 'தலைவா', 'மெர்சல்', மற்றும் 'சர்கார்' படத்தின்போது விஜய் ஆகியோர் அரசியல்வாதிகளால் பாதிக்கப்பட்டவர்கள். அதேபோல் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் விஷாலை போட்டியிடவிடாமல் செய்தவர்களும் அரசியல்வாதிகள் தான்.
இதற்கு முடிவுகட்ட அரசியல்வாதிகளை எதிர்க்க நடிகர்கள் ஒன்று சேர வேண்டும் என்று ஒரு கூட்டம் முயற்சி எடுத்து வருகிறது. ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், விஷால் என தனித்தனியாக கட்சி அமைத்தால் நிச்சயம் வெற்றி பெற முடியாது என்பதால் அனைவரும் ஒரே அணியில் இணைந்து அரசியல் கட்சிகளை எதிர்க்க வேண்டும் என்ற குரல் தற்போது ஏற்பட்டுள்ளது.
இதற்காக திரையுலகில் உள்ள சீனியர் ஒருவர் முக்கிய நடிகர்கள் அனைவரையும் சந்தித்து அவர்களை ஒருங்கிணைக்கவுள்ளதாக கூறப்படுகிறது. கமல், ரஜினி, விஜய், விஷால் என பெரிய நடிகர்களை ஒரே அணியில் இணைப்பது சாத்தியமாகிவிட்டால் நிச்சயம் இந்த அணியின் ஆட்சி தான் அடுத்த ஆட்சி என்று கூறப்படுகிறது.