Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

அம்பாசமுத்திரம் ஏ.எஸ்.பி தான் பல்லை புடிங்கி சித்திரவதை செய்தார் - பாதிக்கப்பட்ட நபர்கள் பேட்டி!

அம்பாசமுத்திரம் ஏ.எஸ்.பி தான் பல்லை புடிங்கி சித்திரவதை செய்தார் - பாதிக்கப்பட்ட நபர்கள் பேட்டி!
, புதன், 5 ஏப்ரல் 2023 (12:50 IST)
கடந்த 10ம் தேதி அடிதடி வழக்குத் தொடர்பாக அம்பாசமுத்திரம் போலீசார் காவல்நிலையம் அழைத்து சென்ற நபர்கள் கடுமையான சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தமிழகத்தை பரபரப்பாகியுள்ளது இது தொடர்பாக பாதிக்கப்பட்ட நபர்கள் செய்தியாளரை சந்திக்கும் பொழுது .
 
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் தாலுகா சிவசக்தி நகரை சார்ந்த 23 வயது வாலிபர் அருண்குமார் கூறியதாவது யூனிபார்ம் அணியாத இரு போலீசார் பின்னாலிருந்து இறுகப் பிடித்துக் கொண்டு எனது கால்களை அசையவிடாமல் எனது அவர்கள் கால்களால் மிதித்துக் கொண்டார்கள். 
 
அப்போது பல்வீர்சிங் ASP கையை அவர்கள் என் முன்னால் வந்து என்னை வாயைத் திறக்க சொன்னார். நான் திறக்கமாட்டேன் என்று வாயை இறுகலாக மூடிக் கொண்டேன். இதனைப் பார்த்த பல்வீர்சிங் ASP அவர் கையில் வைத்திருந்த கல்லால் எனது இடது பக்க கீழ் உதட்டில் ஓங்கி அடித்தார். நான் வலி தாங்க முடியாமல் அம்மா எனக் கத்தினேன். 
 
அப்போது வாயைத் திற என்று சொன்னார். நான் பயந்துகொண்டே வாயைத் திறந்தேன். உடனே பல்வீர்சிங் ASP அவர்கள் தன் கையில் வைத்திருந்த சுமார் 250 கிராம் எடை கொண்ட கருங்கல்லை வைத்து மேல்தாடையிலுள்ள பற்களில் அழுத்தி தேய்த்தார். மேலும், பற்களின் மேலே உள்ள சதைப்பகுதியையும் சேர்த்து தேய்த்தார். 
 
என்னால் வலி தாங்க முடியாமல் வாய்விட்டுக் கத்தக்கூட முடியாமல் அழுதேன். தொடர்ந்து கீழ்த்தாடையில் உள்ள பற்களையும் சதையினையும் தேய்த்தார். அப்போது எனக்கு உயிர் போகிற அளவிற்கு வலி ஏற்பட்டது. 
 
அதன் பின்பு எனது மேல்தாடையிலுள்ள பல்லை ஓங்கி ஓங்கி சுமார் 5 முறை அடித்தார். அப்போது நடுப்பல்லை ஒட்டியுள்ள இடதுபக்க முதல்பல் பாதி உடைந்தது. நான் வலி தாங்க முடியாமல் விடுங்க சார் விடுங்க சார் என்று கத்தினேன். 
 
நான் வலி தாங்க முடியாமல் வாயை மூடியபோதெல்லாம் உதட்டில் கல்லால் அடித்தார். இதனால் நான் வாயைத் திறக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மேல்பக்க பல் உடைந்த பின்பு கீழ்த்தாடையிலுள்ள பல்லில் கல்லை வைத்து தட்டி தட்டி உடைத்தார். இதனால் கீழ்பக்கம் உள்ள நடு 3 பற்கள் பாதி உடைந்து கீழே விழுந்தது.
 
மீண்டும்  ஏஎஸ்பி அவர்கள் எனது வலது பக்க கீழ் பற்களில் கல்லை வைத்து தட்டினார். அதன் பின்பு இரண்டு பற்களும் நடுவே கல்லை வைத்து கடிக்க சொன்னார். நான் கல்லை கடிக்க மறுத்தபோது பின்னாலிருந்து லத்தியால் என் பிட்டம் மற்றும் பின்பக்க கால்களில் ஓங்கி ஓங்கி அடித்தார்கள். 
 
லத்தியால் அடித்ததால் வலி தாங்க முடியாததால் எனது வலது பக்க பல்லின் நடுவே கல்லை வைத்தபோது நான் அதைக் கடித்தேன். சுமன் 5 முறை திரும்ப திரும்ப ஈடிக்சு சொன்னார்கள். நான் கடிக்க மறுத்தபோதெல்லாம் அடித்தார்கள். அதன்பின்பு பல்வீர்சிங் ASP அவர்கள் பல்லை பலமுறை தனது கைகளால் ஆட்டி வெடுக்கென பிடுங்கி எடுத்துவிட்டார். 
 
அப்போது அம்மா என ஒங்கி சத்தி அலறினேன். அதன்பின்பு என்னை தனியாக உட்காரச் சொன்னார். ஏற்கனவே லத்தியால் அடித்ததால் இடுப்பு, பிட்டம் மற்றும் கால்களில் பயங்கர வலியாக இருந்தது. பல்லை தேய்த்து, அடித்து உடைத்ததால் கழுத்து, தலை, முகம் என அனைத்து பகுதிகளிலும் மிகவும் வலியாக இருந்தது.
 
 
அம்பாசமுத்திரம் அடையகருங்குளம் கிராமம் பகுதியைச் சார்ந்த 17 வயது சிறுவன் கூறியதாவது, ஏ எஸ் பி பல்வீர் சிங்  எதோ திட்டிக்கொண்டே சுமார் 5 அடி உயரமுள்ள லத்திக் கம்பை எடுத்து என் பின்பக்க தொடையில் ஓங்கி ஓங்கி பலமுறை அடித்தார். நான் வலிதாங்க முடியாமல் கதறினேன். சுமார் 10 நிமிடங்கள் விடாமல் தொடர்ச்சியாக அடித்தார். 
 
அதன்பின்னர் விகிரமசிங்கபுரம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர்  முருகேசன் , என் இரண்டு கையை நீட்டச் சொல்லி லத்தியால் ஓங்கி ஓங்கி பலமுறை அடித்தார். என்னை பின்னால் திரும்பி நிற்க சொல்லி என் பின்பக்க பிட்டத்தில் அடித்தார். அதன் பின்னர் A.S.P பல்வீர்சிங் மேஜையில் இருந்த ஒரு கல்லை எடுத்து எனது வாயின் முன்புற உதடுகளை அகலமாக விரிக்கச் சொல்லி கற்களால் என் பற்களில் கடுமையாகத் தேய்த்தார். 
 
என் உதட்டில் கல் பட்டு சிராய்ப்பு காயம் ஏற்பட்டு இரத்தம் கொட்டியது. எனது பற்கள் கூச ஆரம்பித்தது, பின்னர் A.S.P பல்வீர்சிங்  பூட்ஸ் காலால் என் இடதுபக்க நெஞ்சில் ஓங்கி மிதித்தார். நான் நிலைதடுமாறி கீழே விழுந்து வலியால் அலறினேன். எனக்கு நடந்த சித்திரவதைகளை, என் அண்ணன் அருண்குமார் உட்பட 6 பேரும் பயந்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள். இந்த சம்பவம் சுமார் 2 மணி நேரம் நடந்தது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மீடியா ஒன் தொலைக்காட்சி மீதான மத்திய அரசின் தடை நீக்கம்: உச்ச நீதிமன்றம் உத்தரவு