எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கார் மீது செருப்பு வீசிய விவகாரத்தில் அமமுகவினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நேற்று மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவுநாளையொட்டி அவரது நினைவிடத்தில் அதிமுக கட்சியை சேர்ந்த எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், ஜெயக்குமார் உள்ளிட்ட பல அதிமுக பிரமுகர்கள் மலர் தூவி மரியாதை செய்தனர். தொடர்ந்து அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரனும் அங்கு வர இருந்ததால் அமமுகவினரும் குவிந்திருந்தனர்.
இந்நிலையில் மரியாதை செலுத்தி முடித்து எடப்பாடி பழனிசாமி புறப்பட்ட நேரத்தில் அதிமுக – அமமுகவினரிடையே தகராறு எழுந்ததாக கூறப்படுகிறது. அப்போது அடையாளம் தெரியாத நபர் செருப்பை எடப்பாடி பழனிசாமி கார் மீது வீசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக அமமுகவினர் 100க்கும் மேற்பட்டோர் மீது அண்ணா சதுக்கம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.