'தமிழக வெற்றிக் கழகம்' கட்சியின் தலைவர் விஜய் இன்று நாகப்பட்டினம் மற்றும் திருவாரூரில் மக்கள் சந்திப்பு பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார். நாகையில் தனது பயணத்தை முடித்துக்கொண்டு அவர் திருவாரூர் செல்லவிருக்கும் நிலையில், அங்கு அரசியல் சுவரொட்டி போர் ஒன்று வெடித்துள்ளது.
திருவாரூரில் விஜய்யின் வருகையை முன்னிட்டு, 'தமிழக வெற்றிக் கழகம்' கட்சியினர் "நாளைய முதல்வரே வருக" என்ற வாசகத்துடன் பிரமாண்ட போஸ்டர்களை ஒட்டி அவரை வரவேற்றனர். இந்த போஸ்டர்கள், விஜய்யின் அரசியல் கனவுகளையும், அவர் மீதான தொண்டர்களின் எதிர்பார்ப்புகளையும் வெளிப்படுத்துவதாக உள்ளன.
விஜய்யின் வருகையை அறிந்த ஆளும் கட்சியான திமுக, அதற்கு போட்டியாக அதே பகுதிகளில் தங்கள் அரசின் சாதனைகளை விளக்கி போஸ்டர்களை ஒட்டியுள்ளது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் புகைப்படம் இடம்பெற்றுள்ள அந்த சுவரொட்டிகளில், கடந்த நான்கு ஆண்டுகளில் தங்கள் ஆட்சி செய்த சாதனைகள் பட்டியலிடப்பட்டுள்ளன.
ஒரு புதிய அரசியல் தலைவர் தங்கள் பகுதிக்கு வரும்போது, அதை எதிர்கொள்ளும் விதமாக ஆளும் கட்சி இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்வது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய்யின் அரசியல் வருகை, ஆளும் கட்சிக்கு ஒரு சவாலாக மாறிவருவதை இந்த சம்பவம் உணர்த்துவதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.