திமுக தலைவர் கருணாநிதி அனுமதிக்கப்பட்டிருக்கும் காவேரி மருத்துவமனை வளாகத்தின் முன்பு காத்திருக்கும் திமுக தொண்டர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்களுக்கு தண்ணீரும், உணவும் வழங்கப்பட்டுகிறது.
உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள கருணாநிதிக்கு கடந்த 4 நாட்களாக சென்னை காவேரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவ்வப்போது அவரது உடல்நிலை மோசமடைந்தாலும், மருத்துவர்களின் சிகிச்சை காரணமாக அவர் உடல் நிலை சீரான நிலையில் இருந்து வருகிறது. தமிழக மற்றும் தேசிய அரசியல் தலைவர்கள் நேரில் வந்து அவரது உடல்நிலை குறித்து விசாரித்து செல்கின்றனர்.
அதேபோல், நலம் பெற்று கருணாநிதி திரும்பி வருவார். தங்களை பார்த்து கை அசைப்பார் என பல திமுக தொண்டர்கள் மருத்துவமனை முன்பு இரவும், பகலுமாக காத்திருக்கின்றனர். மேலும், செய்திகளை சேகரிக்க பல செய்தியாளர்களும் அங்கேயே தங்கியுள்ளனர்.
இந்நிலையில், திமுக தொண்டர்களுக்கு தண்ணீர் மற்றும் உணவு வசதிகளை செய்து கொடுக்குமாறு நிர்வாகிகள் கோரிக்கை வைக்க திமுக எம்.எல்.ஏ ஜே. அன்பழகன் அதற்கான நடவடிக்கைகளை எடுத்தார். அதன்படி திமுக தொண்டர்களுக்கும், செய்தியாளர்களுக்கும் மூன்று வேளையும் உணவு வழங்கப்பட்டு வருகிறது. மாலையில் பிரியாணியும், இரவில் ஃபிரை ரைஸ்ஸும் வழங்கப்படுகிறதாம்.
இது தொடர்பான புகைப்படங்களை ஜே. அன்பழகன் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.