திமுக தலைவர் ஸ்டாலினின் மகன் என்பதை தவிர்த்து உதயநிதிக்கு என்ன அறிமுகம் இருக்கிறது என்பதை அவரது நண்பர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டார். திமுக தலைவர் ஸ்டாலினின் மகன் என்ற ஒரே காரணத்தினால் உதயநிதிக்கு கட்சி பதவி கொடுக்கப்பட்டுள்ளது என நேரடி விமர்சனங்கள் பல எழுந்தது.
ஆனால், உதயநிதி தேர்தலில் பிரசாரம் செய்து திமுகவுக்கு வெற்றியை தேடித் தந்தவர் என்ற காரணத்தால் பதவி வழங்கியதாக கட்சி தரப்பு கூறினாலும் இதை மழுப்பல் காரணமாகவே பார்க்கின்றனர்.
இந்நிலையில் உதயநிதியின் நண்பர் அன்பில் மகேஷ் உதயநிதி குறித்து பேசியுள்ளார். அவர் கூறியது பின்வருமாறு, 1984 ஆம் ஆண்டு ஸ்டாலின் முதன் முதலாக தேர்தலில் போட்டியிட்ட போது அவருடன் பிரசாரத்துக்கு சென்றவர் உதயநிதி.
உதயநிதி வளர்ந்த பின்னர் ஸ்டாலினுடன் ஒவ்வொரு தேர்தல் பிரசாரத்துக்கும் உடன் சென்றவர். உள்ளாட்சி தேர்தல், சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தல்கள் என அனைத்திலும் பங்கேற்றவர் உதயநிதி.
உதயநிதி மிகவும் அமைதியாக இருப்பார். அவரை சுற்றி இருப்பவர்கள் பேசுவதை உன்னிப்பாக கவனிப்பார். கட்சி நிகழ்ச்சிகளில் பொதுவாக மேடை ஏறமாட்டார். மேடைக்கு கீழேதான் அமர்ந்திருப்பார்.
உதயநிதிக்கு ஒருபோதும் மேடையில் ஏறி அமர வேண்டும் என்ற நினைப்பு இல்லை. தொண்டர்களோடு தொண்டராகத்தான் அமர்ந்திருப்பார். பொதுக்கூட்ட மேடைக்கு கீழே நின்று கட்சி கொடி ஏந்தி முழக்கங்களை எழுப்பிக் கொண்டிருப்பார் என உதயநிதியின் கட்சி பணிகள் குறித்து தெரிவித்தார்.