உசிலம்பட்டியில் ஒரே ஓட்டுநர் 6 பேருந்துகளை பணிமனையிலிருந்து எடுத்து செல்வதாக கூறி ஓட்டுநர்களுடன் அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் அரசு போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி போக்குவரத்து பணிமனையில் உள்ள 94 பேருந்துகளில் தினசரி 68 பேருந்துகள் இயக்கப்பட்டு வந்த நிலையில் காலை 5 மணி முதல் 7 மணி வரை சுமார் 42 பேருந்துகள் தொ.மு.ச தொழிற்சங்க ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களால் இயக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் உசிலம்பட்டி அரசு போக்குவரத்து பணிமனையிலிருந்து அதிகப்படியான பேருந்துகள் வெளியேறி விட்டது என கணக்கு காட்டுவதற்காக ஒரே ஓட்டுநர் 6 பேருந்துகளை பணிமனையிலிருந்து எடுத்து செல்வதாக குற்றம் சாட்டி, போக்குவரத்து பணிமனை முன்பு அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் பேருந்தை எடுத்து செல்ல வந்த ஓட்டுநர்களுடன் மற்றும் பணிமனை மேலாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலிசார் வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பேருந்துகளை எடுத்து செல்ல வைத்தனர்.