பாரதிய ஜனதா கட்சி குறித்து அதிமுக அமைப்புச் செயலாளர் பொன்னையன் தெரிவித்துள்ள கருத்திற்கு அண்ணாமலை இன்று பதில் அளித்துள்ளார்.
பாரதிய ஜனதா கட்சி தமிழ்நாடு மாநில தலைவர் அண்ணாமலை திருச்சியில் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்தியாவில் 70 ஆண்டுகளில் இல்லாத சாதனையை, பாஜகவின் 8 ஆண்டு கால ஆட்சி செய்துள்ளது. இதைக் கொண்டாடும் வகையில், வரும் 15 ஆம் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்துகிறோம் என்றார்.
தொடர்ந்து பாஜக குறித்து அதிமுக அமைப்புச் செயலாளர் பொன்னையன் கூறியுள்ளது குறித்த கேள்விக்கு, ஒவ்வொருவரும் தங்கள் கட்சி முதன்மை இடத்திற்கு வர வேண்டும் என்கிற விருப்பம் இருக்கும். அதற்காக கருத்து தெரிவிக்கலாம்.
ஒரு தலைவர் கூட சொன்னார் (பாமக தலைவர் அன்புமணி) நாங்க தான் பெரிய கட்சி, பாஜக சின்ன கட்சி என்று, அவர்கள் 20 ஆண்டுகளுக்கு முன்பு, பெரிய கட்சியாக இருந்திருக்கலாம். ஆனால், மக்களின் அன்பைப் பெற்று, பாரதிய ஜனதாக் கட்சி தமிழ்நாட்டில் முதன்மைக் கட்சியாக வரும்.
இது போன்ற விமர்சனங்களை வைத்துப் பார்க்கும் போது, பாஜக மிகப் பெரிய அளவில் வளர்ச்சியடைந்து வருவதைக் காட்டுகிறது. தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தலில் 3வது பெரிய கட்சி யார், என்பது தெளிவாகியுள்ளது. வரும் 2024 தேர்தலில் தமிழ்நாட்டில் பாஜகவிற்கு 25 எம்.பிக்கள் கிடைப்பார்கள். இந்த தேர்தலில் பெரும் திரளாக பாஜகவிற்கு ஆதரவு கிடைக்கும் என்றார்.