பிரதமரின் நிகழ்ச்சியில் பங்கேற்காமல் அவமதித்த முதல்வர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறிய போது, ₹8,300 கோடி மதிப்பிலான நலத்திட்டங்கள் நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளன என்றும், பாம்பன் பாலம் சிறப்பாக திறக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
கடந்த நான்கு ஆண்டுகளில் பிரதமர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் தவறாமல் பங்கேற்ற முதல்வர், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்காமல் போனது வருத்தம் அளிக்கிறது என்றும், அதற்காக முதல்வர் சொல்லியிருக்கும் காரணம் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் கூறினார்.
பிப்ரவரி மாதமே பாம்பன் பாலம் திறப்பு விழாவுக்கான நாள் குறிக்க மாநில அரசுடன் பேசியது முதல்வருக்கு தெரியும் என்றும், அப்படி இருக்கும்போது பிரதமரை வரவேற்க வேண்டியது மாநிலத்தின் பிரதிநிதியாக இருக்கும் முதல்வரின் கடமை என்றும் அவர் குறிப்பிட்டார்.
ராமேஸ்வரத்தில் வெயில் அதிகமாக இருப்பதால் முதல்வர் ஊட்டிக்கு போய்விட்டார் என்றும், ஊட்டி குளிரில் இதமாக இருக்க அங்கே போயிருக்கலாம் என்றும் கூறி, இதனை பாஜக கண்டிக்கிறது என்றும் தெரிவித்தார்.
மேலும், முதல்வர் தனது கடமையை செய்ய தவறிவிட்டதால் பிரதமரை அவமானப்படுத்தியதற்காக தமிழக மக்களிடம் முதல்வர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அண்ணாமலை கூறியுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.