இந்தியாவின் தலைநகரம் தமிழகம் என பாஜக தலைவர் அண்ணாமலை கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
துறைமுகங்கள் தனியார் மயமாக்கப்பட்டதினால் தான் போதை பொருட்கள் இந்தியாவில் நுழைகிறது என்பன போன்ற விசித்திரமான சில குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார் அமைச்சர் பொன்முடி. 2020-ம் ஆண்டு தூத்துக்குடி துறைமுகத்தில் சுமார் 115 கிலோ ஹெராயின் மற்றும் ஏ.டி.எஸ். எனப்படும் போதை பொருள் தேசிய போதை பொருள் தடுப்பு பிரிவினால் பறிமுதல் செய்யப்பட்டது
2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் வரையில் மட்டும் தமிழகத்தில் 1238.84 கிலோ போதைப் பொருட்களை போதை பொருள் தடுப்பு பிரிவு பறிமுதல் செய்தது அமைச்சருக்கு தெரியாதா? 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 21 கிலோ ஹெராயின் தூத்துக்குடியில் பிடிபட்ட செய்தியை அமைச்சர் மறந்துவிட்டாரா?
போதை பொருள் தடுப்பு பிரிவுக்கு தமிழக காவல்துறை கொடுத்த புள்ளி விவரத்தின்படி 2021-ம் ஆண்டு மே மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை பறிமுதல் செய்யப்பட்ட கோகைனின் அளவு வெறும் 0.05 கிலோ ஆகும். பெரும்பாலும் வெளி நாட்டிலிருந்து கடத்தி கொண்டுவரப்படும் போதை பொருள் இதுவே. தமிழகத்தில் பெரிதாக புழக்கத்தில் இருப்பது கஞ்சா.
தமிழகத்தில் போதை பொருள் விற்ற குற்றத்திற்காக 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 742 பேர், 2020-ம் ஆண்டு கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 771 பேர், 2021-ம் ஆண்டு கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,558 பேர். கஞ்சா விற்பனை அமோகம் தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின் கைது அதிகமாகிவிட்டது என்று பெருமைபட்டுக் கொள்ளும் அமைச்சர். தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின்தான் தமிழகத்தில் எட்டுத்திக்கும் கஞ்சா விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது என்பதை உணர வேண்டும்.
4 வாரங்களுக்கு முன் 2 கிலோ கஞ்சா கடத்திய தி.மு.க. பிரமுகர் திருச்சி அருகே கைது செய்யப்பட்டார் என்பதை இந்த அறிக்கையின் வாயிலாக உங்கள் கவனத்திற்கு முன்வைக்க கடமைப்பட்டுள்ளேன். இந்த ஆண்டு ஜனவரி மாதம் தி.மு.க. நிர்வாகி போதை பொருளுடன் ஆந்திராவில் பிடிபட்டார் என்ற செய்தி உட்பட பல செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.
இப்படி தூத்துக்குடியிலிருந்து பல இடத்திற்கு போதை பொருட்கள் கடத்தப்படுகிறது என்று வேறு மாநிலத்தவர் குற்றம் சாட்டினால் அது தமிழகத்திற்கு எவ்வளவு பெரிய தலைகுனிவு? 'டாஸ்மாக்' வசூல் கடத்தி செல்லும் நபர்களை மட்டும் கைது செய்து வரும் முதல்-அமைச்சரின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள போலீஸ்துறை, எங்கிருந்து இந்த கஞ்சா வருகிறது, அதை எப்படி முடக்குவது? என்பதை ஆலோசிக்காமல் தமிழகத்தை கஞ்சாவின் தலைநகரமாக மாற்றியதுதான் தி.மு.க. அரசின் சாதனை. 'டாஸ்மாக்' மூலமாக மது விற்று ஒவ்வொரு தமிழனிடமும் சராசரியாக சென்ற ஆண்டு மட்டும் ரூ.5 ஆயிரம் வசூல் செய்த அரசு போதையை ஒழிக்கும் என்று எப்படி நம்புவது? தங்களின் திறனற்ற தன்மையை மறைக்க மத்திய அரசின் மேல் பழி போடுவதை தி.மு.க. நிறுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.