தமிழ்நாட்டில் கணினிக் கல்வியை பயிற்றுவித்ததில் முன்னோடி மாநிலமாக விளங்கியதைப்போல AI தொழில்நுட்பத்தையும் முதல் மாநிலமாக பயிற்றுவிக்கிறோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை,
கடந்த 2022 ஆம் ஆண்டு மத்திய அரசின் சிபிஎஸ்இ ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று, தமிழகப் பள்ளிகளிலும் செயற்கை நுண்ணறிவு (AI) குறித்த பாடத்திட்டத்தைச் அறிமுகப்படுத்தியதற்காக, தமிழக அரசுக்குதமிழக பாஜக சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் பாடத் திட்டத்திற்காக, சிபிஎஸ்இ கல்வி ஆணையம், ஒப்பந்தம் செய்துள்ள மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துடனேயே, தமிழக அரசும் ஒப்பந்தம் செய்திருப்பது மகிழ்ச்சி.
வரும் கல்வி ஆண்டு முதல் செயற்கை நுண்ணறிவு (AI) பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தவிருப்பதாக உத்திரப் பிரதேச மாநில அரசு கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அறிவித்திருந்த நிலையில், தமிழக அரசும் தற்போது பள்ளிப் பாடத்திட்டத்தை மேம்படுத்த முயற்சிகளை மேற்கொள்வது பாராட்டுக்குரியது.
மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திரமோடி அவர்கள் கொண்டு வந்த புதிய கல்விக் கொள்கையை படிப்படியாக தமிழகத்தில் செயல்படுத்திக் கொண்டிருக்கும் தமிழக அரசு, தாய்மொழியை அடிப்படையாகக் கொண்ட மும்மொழி கல்விக் கொள்கையையும் விரைவில் தமிழகத்தில் கொண்டு வரும் என்ற நம்பிக்கை இருக்கிறதுஎன்று தெரிவித்துள்ளார்.