சமீபத்தில் சென்னை மெரினா கடற்கரையில் பணக்கார தம்பதியர் போலீசாரிடம் தகாத வார்த்தையில் பேசிய நிலையில், மகாபலிபுரத்தில் காரில் வந்த கும்பல் காவலாளியை தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மெரீனா கடற்கரையில் போலீஸார் ரோந்து சென்றபோது அங்கு நல்ல முழு போதையில் இருந்த தம்பதியரை வெளியேற்ற முயன்றனர். அதற்கு அந்த தம்பதியர் என்கிட்ட ஐஃபோன் இருக்கு.. இது விலை எத்தனை லட்சம் தெரியுமா? உன்கிட்ட என்ன இருக்கு. நான் யார் தெரியுமா?” என பணக்கார திமிர்தனத்தை காட்டி வம்பு செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
அதன்பேரில் காவலர்களிடம் தகாத வகையில் பேசிய தம்பதி மீது வழக்குப்பதிவு செய்த நிலையில் அந்த தம்பதிகள் ஒரு லாட்ஜில் சென்று பதுங்கினர். இருந்தும் போலீஸார் அந்த தம்பதியரை தேடி பிடித்த நிலையில் தங்கள் செயலுக்கு மன்னிப்பு கேட்டு பம்மினர். இந்த வீடியோவும் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இதுபோன்ற ஒரு சம்பவம் நேற்று மகாபலிபுரத்திலும் நடந்துள்ளது. மகாபலிபுரத்திற்கு வந்த சுற்றுலா பயணிகளின் சொகுசு கார் ஒன்று No Entry வழியாக பார்க்கிங் ஏரியாவிற்குள் நுழைய முயன்றுள்ளது. அதை அங்கிருந்த காவலாளி ஒருவர் தடுத்தார். இதனால் காருக்குள் இருந்தவர்கள் ஆத்திரமடைந்து காவலாளியை மூர்க்கமாக தாக்கினர். இதில் இரண்டு பெண்களும் அடக்கம். அடிக்கும்போது “நாங்க யார் தெரியுமா? எங்களையே தடுத்து நிறுத்துறியா?” என அவர்கள் கேட்டுக் கொண்டே தாக்கியுள்ளனர்.
இந்த விவகாரம் குறித்து 2 பெண்கள் உள்ளிட்ட 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் அவர்கள் யாரென வீடியோ ஆதாரங்களை கொண்டு தேடி, கைது செய்ய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
தொடர்ந்து இதுபோன்ற வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில் ஒரு காரும், ஐஃபோனும் வைத்துக் கொண்டால் மற்றவர்களை ஏளனமாக பார்ப்பதும், மோசமாக நடந்து கொள்வதும் சரியா என்ற கேள்வி எழுந்துள்ளது.
Edit by Prasanth.K