மத்திய அரசு தமிழகத்திற்கு வரிப்பகிர்வில் பாரபட்சம் காட்டுவதாக விமர்சித்து வைக்கப்பட்ட பேனரை மர்ம நபர் கிழித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கி நடந்து வரும் நிலையில் கடந்த ஆண்டுகளில் மத்திய அரசு தென் மாநிலங்களுக்கு வரிப்பகிர்வில் பாரபட்சத்தோடு நடந்து கொண்டதாக கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய மாநிலங்களின் எம்பிக்கள் குற்றம் சாட்டியுள்ளதுடன், டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
திமுக எம்.பி வில்சன், மத்திய அரசு தமிழகம் தரும் 1 ரூபாயிலிருந்து வெறும் 26 பைசாவையே திரும்ப தருவதாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். மத்திய அரசை கண்டித்து மாநில அரசுகள் போராட்டம் தொடர்ந்து வரும் நிலையில் சென்னையின் பல்வேறு பகுதிகளில் ”உங்களுக்கு தெரியுமா? தமிழ்நாடு அளிக்கும் ஒரு ரூபாயிலிருந்து ஒன்றிய அரசு திருப்பித் தரும் வரிப்பகிர்வு வெறும் 26 பைசா” என பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இந்த பேனர்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சென்னை கோயம்பேடு பேருந்து முனைய மேம்பாலம் அருகே அவ்வாறாக வைக்கப்பட்டிருந்த பேனரை ஆசாமி ஒருவர் உயரத்தில் ஏறி கிழித்துள்ளார். ஆபத்தான முறையில் கட்டட கம்பத்தில் ஏறி அவர் பேனரை அகற்ற முயன்ற செயலால் பரபரப்பு எழுந்துள்ளது.