உள்ளாட்சி தேர்தல் பொறுத்தவரை தமிழகம் முழுவதும் போட்டியிட பாஜக விரும்புகிறது என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் வருகிற டிசம்பர் மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் திமுக, அதிமுக, திமுக கூட்டணி கட்சிகள் மற்றும் அதிமுக கூட்டணி கட்சிகள் அதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இந்த உள்ளாட்சி தேர்தலில் மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடைபெறும் என்று அரசாணையை பிறப்பித்துள்ளது அதிமுக அரசு. இது ஆளும் கட்சிக்கு சாதகமான ஒன்றுதான் என்றாலும், எதிர்கட்சிகள் இதனை வன்மையாக கண்டித்துள்ளனர். இந்நிலையில் பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷணன் உள்ளாட்சி தேர்தல் குறித்து பேசியுள்ளார்.
பொன்.ராதாகிருஷணன் பேசியதாவது, உள்ளாட்சி தேர்தல் பொறுத்தவரை தமிழகம் முழுவதும் போட்டியிட பாஜக விரும்புகிறது. அதற்கான பணிகளும் நடைபெற்று வருகின்றன. தேர்தல் நெருங்கும் போது அது குறித்த அறிவிப்புகளை வெளியிடுவோம்.
அதே சமயம் பாஜக தனித்து போட்டியிடுவது குறித்து கட்சி தலைமை முடிவு செய்யும். அந்தந்த இடங்களில் உள்ள கள நிலவரத்தை கண்டு அதற்கு ஏற்றவாறு முடிவு எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். பாஜக தனித்து போட்டியிடாது என்றாலும், கூட்டணியில் இருக்கும் பட்சத்தில் அதிக இடங்களை கேட்டு அதிமுகவிற்கு நெருக்கடி கொடுக்க கூடும்.
மறைமுக தேர்தல் என்பதால் எளிதாக பாஜகவில் இருந்து மேயர்கள் உருவாக கூட அதிக வாய்ப்புகள் இருக்கிறது. பாஜகவுக்கு அதிக இடங்களை வழங்கினால் கட்சிக்குள் பிரச்சனையுடன் அதிமுக தலைமை திணக்கூடும் என தெரிகிறது.