ஆயுத பூஜையில் சாமி படம் பயன்படுத்தக்கூடாது விவகாரத்தில் பாஜக பிரமுகர் நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் வெளியிட்ட சுற்றறிக்கை ஒன்றினை நேற்று நாம் பகிர்ந்திருந்தோம். ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை கொண்டாடும் நிகழ்வில் சாமி படங்களை பயன்படுத்தக்கூடாது என்ற ஒரு சுற்றறிக்கையை கண்டோம்.(சுற்றறிக்கை 1- அ.ஆ.55/திவ/2023)
இன்று மீண்டும் அதே சுற்றறிக்கை எண் மூலம் மற்றொரு சுற்றறிக்கை மூலம் எந்த சுற்றறிக்கையும் வெளியிடவில்லை என்றும் உண்மைக்கு புறம்பானது என்றும் குறிப்பிடப்பட்டிருப்பது வியப்பளிக்கிறது?
என்ன சொல்ல வருகிறார் அக்கல்லூரி முதல்வர்?
நேற்று இது குறித்து நிருபர்கள் கேட்டதற்கு கடந்த சில வருடங்களாக வழக்கமாக வெளியிடப்படும் அறிக்கை தான் என்று சொன்னவர் இன்று இதை வெளியிடவில்லை என்று சொல்வது ஏனோ?
யாரோ தெரியாமல் செய்து விட்டனர் என்று அலைபேசியில் குழப்பமாக ஒருவருடன் பேசிய ஆடியோ சமூக வலைத்தளங்களில் வருவது குறித்து அவர் விளக்கம் தருவாரா?
அப்படி அவர் வெளியிடவில்லையெனில் அவர் பெயரில் அவர் பெயரை வெளியிட்டது யார்? அது குறித்து காவல் துறையில் புகார் ஏதும் அளிக்கப்பட்டுள்ளதா?
திருப்பூர் மாவட்ட ஆட்சியரின் மின்னஞ்சல் கூறியது என்ன என்று பொது வெளியில் பகிர்வாரா?
கல்லூரியிலிருந்து வெளியான சுற்றறிக்கைக்கு யார் பொறுப்பேற்பது? போன்ற பல்வேறு கேள்விகள் எழுகின்றன. மாவட்ட ஆட்சியரும், கல்லூரி முதல்வரும் இதற்கு பொறுப்பேற்று நிர்வாக சீர்கேட்டின் அவலத்தை ஒப்புக்கொள்ள வேண்டும்.