மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க ஆளுனர் ஒப்புதல் அளிக்க கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், இட ஒதுக்கீடு வழங்க வேண்டாம் என பாஜக தரப்பிலிருந்து அனுப்பபட்டுள்ள கடிதம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு மருத்துவ படிப்புகளில் 7.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்குவது குறித்து தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றி ஆளுனர் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளது. ஆனால் இன்னமும் ஆளுனர் ஒப்புதல் அளிக்காமல் இருப்பதை பல்வேறு கட்சிகளும் கண்டித்த நிலையில் பாஜக தலைவர் எல்.முருகனும் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார்.
இந்நிலையில் பாஜக தரப்பிலிருந்து இடஒதுக்கீடு வழங்க கூடாது என ஆளுனருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாஜகவின் மாநில கல்வி பிரிவு செயலாளர் நந்தகுமார் என்பவர் இந்த கடிதத்தை எழுதியதாக தெரிய வந்துள்ளது. அவர் கட்சியின் அனுமதியோடு இந்த கடிதத்தை அனுப்பினாரா அல்லது சொந்த விருப்பத்தின் பேரில் எழுதினாரா என்பது தெரியாத நிலையில் இந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.