சென்னை அம்பத்தூர் பகுதியில் ஆடுமாடுகளை திருட ஆட்டோவில் வந்த கும்பலை பிடித்த பொதுமக்கள் அவர்களுக்கு தர்ம அடி கொடுத்தனர். இந்த வீடியோ தற்போது சமூகவலை தளங்களில் பரவலாகி வருகிறது.
சென்னை அம்பத்தூரில் உள்ள புதூர் என்ற பகுதியில் வீடுகளில் வளர்த்து வந்த ஆடு, மாடுகள் திருடப்படுவது வாடிக்கையாகி வந்தது. இதனால் அங்குள்ள மக்கல் கடும் கோபத்தில் இருந்தனர். ஆடு மாடுகளை வைத்து பிழைப்பு நடத்திக்கொண்டிருந்த மக்களுக்கு இந்த திருட்டினால் பெரிய நஷ்டம் ஏற்பட்டது.
இந்நிலையில் அப்பகுதியில் இன்று ஒரு கும்பல் ஆட்டோவில் வந்துள்ளனர். பொதுமக்கள் சந்தேகம் அடைந்து அவர்களிடம் விசாரித்தனர். அப்பொது ஆட்டோவில் இருந்தவர்கள் முரணான பதில்களை கூறியதாகத் தெரிகிறது. அப்போது பயந்து போன கூட இருந்த இருவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். பின்னர் அந்த ஓட்டுநருக்கு தர்ம அடிகொடுத்து காவல்நிலையத்தில் ஒப்படைத்ததாகத் தெரிகிறது.
ஆட்டோ ஓட்டுநரிடம் போலீஸார் விசாரித்தனர் . அதில் தன் பெயர் கான் , தன்னுடன் வந்த இருவரில் ஒருவர் பாபு, மற்றொருவர் சேகர் என்று தெரிவித்தார். ஆடு மாடுகளை திருடி கறிக்கடைக்கு கொடுத்ததையும் ஒப்புக்கொண்டார். தற்பொழுது அவர்களிடம் போலீஸார் விசாரித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.