சென்னையில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வரும் நிலையில், பழைய குற்றவாளிகளின் விவரங்களை திரட்டி விசாரணை நடத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
சென்னை நந்தம்பாக்கம், அண்ணா நகர், கோபாலபுரம், பெரம்பூர் உள்ளிட்ட 13 தனியார் பள்ளிகளுக்கு, பிப்ரவரி எட்டாம் தேதி காலை 10:00 மணியில் இருந்து, மாலை 3:40 வரை இ-மெயில் வாயிலாக மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தனர்.
இதனால், பள்ளிகளின் நிர்வாகத்தினர் அதிர்ச்சியடைந்தனர். பள்ளி குழந்தைகள் அவர்களின் பெற்றோருடன் அனுப்பி வைக்கப்பட்டனர். பின்னர், வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய்கள் உதவியுடன் முழுமையாக சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதில், எந்தவித வெடி பொருட்களும் கிடைக்காததால், வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது தெரிய வந்தது. அதேநேரத்தில், அதிநவீன தொழில்நுட்ப உதவியுடன், வெடிகுண்டு மிரட்டல்கள் எந்த இடத்தில் இருந்து வந்துள்ளன. மிரட்டல் விடுக்க பயன்படுத்தப்பட்ட கருவி, சர்வர் குறித்து தீவிரமாக விசாரித்து வருவதாக சென்னை மாநகர போலீசார் தெரிவித்தனர்.
மிரட்டல் விடுத்த நபர் அங்கீகரிப்படாத தனியார் நெட்வொர்க் மூலம் மெயில் அனுப்பியதால் அதன் ஐ.பி முகவரியைக் கண்டுபிடிக்க முயற்சித்து வரும் நிலையில், வெளிநாடுகளின் தனியார் நெட்வொர்க்கை பயன்படுத்தி மெயில் அனுப்பி இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்காக இன்டர்போல் உதவியை நாட சென்னை போலீசார் முடிவு செய்துள்ளனர்.
குற்றவாளியை பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வரும் நிலையில், பழைய குற்றவாளிகளின் விவரங்களை திரட்டி விசாரணை நடத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகம் முழுவதும் ஏற்கனவே வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வழக்குகளின் தொடர்புடைய குற்றவாளிகளின் விவரங்களை சேகரிக்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.