கன்னியாகுமரி மாவட்டத்தில், தனக்கு பிடிக்காத திருமணத்தை, மணப்பெண் மயங்கி விழுந்தது போல் நடித்து நிறுத்திய சம்பவம் நடைபெற்றுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் இடைக்கோடு பகுதியைச் சேர்ந்த இளைஞருக்கும், பாகோடு பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணிற்கும் கடந்த செவ்வாய்கிழமை பாக்கோடு தேவாலயத்தில் திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
இந்நிலையில் திருமண நிகழ்வில், வாக்குறுதிகளை வாசிக்கும்போது, அந்த வாக்குறுதிகளை ஏற்றுகொள்வதாக கூற வேண்டிய மணப்பெண், திடீரென மயங்கி விழுந்தார். மயங்கி விழுந்த பெண்ணை பக்கத்து அறைக்குள் தூக்கிச் சென்று படுக்கவைத்தனர்.
அதன்பின்பு மருத்துவரை வரவழைத்து சிகிச்சை அளித்தனர். அப்போது அந்த இளம்பெண், தனக்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லாததால் மயங்கி விழுந்தது போல் நடித்தேன் என கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து மணமகனின் வீட்டாருக்கும், மணமகளின் வீட்டாருக்கும் பெரும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதன் பின்பு, மணமகளின் சம்மதம் இல்லாமல், திருமணத்தை நடத்த முடியாது என பாதிரியார் கூறியதால், வேறு வழியில்லாமல் இரு வீட்டரும் கலைந்துச் சென்றவர். இந்த சம்பவம் பாகோடு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.