பிஎஸ்என்எல் அறிவித்தது போல நாடு முழுவதும் வேலை நிறுத்த போராட்டத்தை இன்று முதல் துவங்கியுள்ளது. இதனால் பிஎஸ்என்எல் சேவைகள் பல முடங்கியுள்ளது.
4ஜி சேவையை பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு வழங்க வேண்டும், பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல்-லை தனியார்மயமாக்க கூடாது போன்ற பிரதான கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலை நிறுத்தம் வரும் 20 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
தமிழகத்தில் மட்டும் 20 ஆயிரம் ஊழியர்கள் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இந்த வேலை நிறுத்த போராட்டத்தால் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் பல்வேறு பணிகள் முடங்ககியுள்ளது. வாடிக்கையாளர்கள் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
இதுகுறித்து பிஎஸ்என்எல் தரப்பில், 4ஜி சேவையை வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகள் மீது எழுத்து பூர்வமான உத்தரவாதத்தை அளித்தால் மட்டுமே எங்களது போராட்டத்தை நாங்கள் வாபஸ் பெறுவோம்.
மக்கள் நலன், நிர்வாக நலன் சார்ந்தே எங்கள் போராட்டம் அமைந்துள்ளது. எனவே மத்திய அரசு உரிய பதிலை எங்களுக்கு அளிக்க வேண்டும். 4ஜி சேவையை வழங்கினால் தான் வருவாயை அதிகப்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இன்றைய போராட்டத்தினால் கட்டணம் செலுத்தும் மையங்கள் மற்றும் அலுவலகங்கள் முற்றிலும் முடங்கி போயுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.