நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழிக்கு அருகே பரவங்காடு என்ற கிராமம் உள்ளது. அந்த பகுதியில் இன்று காலை ஒரு பஸ் டிரைவரை இரண்டு ரவுடிகள் ஓட ஓட விரட்டி கொன்ற செய்தி அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டம் கொள்ளிடம் அருகே அமைந்துள்ளது பரவங்காடு கிராமம். அந்த கிராமத்தில் கேசவன் நகரைச் சேர்ந்தவர் நடராஜமணி. நடராஜமணி சென்னையில் ஒரு தனியார் கல்லூரியில் பஸ் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது தாயாரின் பெயர் தனம்.
கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு நடராஜமணி தன்னுடைய சொந்த கிராமமான பரவங்காட்டிற்கு தனது தாயாருடன் வந்துள்ளார். இந்நிலையில் நேற்று அதே தெருவில் வசித்து வரும் கார்த்திக் என்பவர் குடிபோதையில் வந்துகொண்டிருந்தார்.
இவ்வேளையில் நடராஜமணி தனது தாயாருடன் தனது வீட்டிற்கு வெளியே நின்று பேசிக்கொண்டிருந்திருக்கிறார். அப்போது நடராஜமணியின் வீட்டை குடிபோதையில் கடந்து சென்ற கார்த்திக்கை நடராஜமணி முறைத்து பார்த்ததாக கூறப்படுகிறது.
”ஏன் என்னை பார்த்து முறைக்கிறாய்?” என்று நடராஜமணியை கேட்டு கார்த்திக் சரமாரியாக திட்டியாதாக தெரியவருகிறது. அது மட்டுல்லாமல் நடராஜமணியின் தாயார் தனத்தையும் வசைச்சொற்களால் திட்டியிருக்கிறார் எனவும் கூறப்படுகிறது.
இதனால் கார்த்திக்கும் நடராஜமணியின் தாயார் தனத்திற்கும் வாக்குவாதம் வந்திருக்கிறது. வாக்குவாதத்தால் ஆத்திரம் அடைந்த கார்த்திக் தனத்தை தாக்கியுள்ளார்.
கார்த்திக் தாக்கியதில் தனத்திற்கு உதட்டில் காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனையடுத்து நேற்று இரவில் கொள்ளிடம் காவல் நிலையத்தில் கார்த்திக்கின் மீது புகார் கொடுத்துள்ளார் நடராஜமணியின் தாயார் தனம்.
இந்நிலையில் இன்று காலை நடராஜமணி தனது வீட்டிலிருந்து கொள்ளிடம் ரயில் நிலையம் அருகே நடந்து வந்துகொண்டிருந்தபோது கார்த்திக் மற்றும் அவரது நண்பர் சத்யா என்பவருடன் வந்து நடராஜமணியை இருவரும் ஓட ஓட விரட்டி வீச்சருவாளைக் கொண்டு சரமாரியாக வெட்டியுள்ளதாக தெரியவருகிறது.
இந்நிலையில் நடராஜமணி வெட்டுபட்டக் காயத்துடன் மயங்கி விழுந்திருக்கார். உடனே கார்த்திக் மற்றும் அவரது நண்பர் சத்யா இருவரும் தப்பி ஓடியுள்ளனர்.
இதனை அடுத்து உடனே சம்பவ இடத்திற்கு ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. வெட்டுபட்டுக்கிடந்த நடராஜமணியை ஆம்புலன்ஸில் ஏற்றி முதலுதவி செய்தனர். ஆனால் அதற்குள் பரிதாபகரமாக நடரஜமணியின் உயிர் பிரிந்து விட்டது.
இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். பின்பு உடனடியாக நடராஜமணியை கொலை செய்த கார்த்திக் மற்றும் அவரது நண்பர் சத்யாவையும் போலீஸார் கைது செய்தனர்.
இச்சம்பவம் கொள்ளிடம் பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.