அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகளின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டுமென்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் தனியார் பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிப்பதாகவும், அதிக கட்டணம் வசூல் தொடர்பாக அடிக்கடி சோதனைகள் நடத்தி சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வகை செய்யும் அரசாணை அமல்படுத்தும்படி அனைத்து வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகளுக்கு உத்தரவிட கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் தலைமை நீதிபதி கங்கா பூர்வாலா மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
இதில், அரசு தரப்பில் சோதனையை தீவிரப்படுத்தி நடவடிக்கை எடுக்கும்படி போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அதிக கட்டணம் வசூலிக்கும் பேருந்துகளுக்கு விதிக்கப்படும் அபராதத்தை 50,000 ரூபாயாக உயர்த்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்து உள்ளிட்ட தனியார் பேருந்துகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல வழக்குகளில் நீதிமன்றம் உத்திரவிட்டதாகவும் சுட்டிக்காட்டினார்.
மேலும் அபராதம் விதிப்பதால் மட்டும் தீர்வு ஏற்பட போவதில்லை என தெரிவித்த நீதிபதிகள், தனியார் பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க அடிக்கடி சோதனை நடத்த வேண்டும் என அறிவுறுத்தினர்.
தொடர் குற்றத்தில் ஈடுபடும் தனியார் பேருந்துகளுக்கான உரிமத்தை ரத்து செய்ய சட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளதால் உரிமத்தை ரத்து செய்வது உள்ளிட்ட கடும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அரசு அதிகாரிகளுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.