தமிழக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட 2 லட்சத்துக்கும் அதிகமானோர் மனுதாக்கல் செய்துள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் தேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணையம் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளை அறிவித்துள்ளது. ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் போட்டியிட விரும்புபவர்கள் வேட்புமனுக்களை கடந்த 9ம் தேதி தொடங்கி, கடைசி நாளான நேற்று மாலை 5 மணிவரை அளித்தனர்.
இன்று முதல் வேட்புமனுக்கள் மீதான் பரிசீலனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வேட்புமனு அளித்துள்ளவர்களின் எண்ணிக்கையை மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
அதன்படி கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 2 லட்சத்து 6 ஆயிரத்து 657 பேர் மனு அளித்திருப்பதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. மேலும் கிராம ஊராட்சி தலைவர், மாவட்ட வார்டு உறுப்பினர் உள்ளிட்ட பதவிகளுக்கும் பெறப்பட்டுள்ள வேட்பு மனுக்களையும் சேர்த்து மொத்தமாக 2 லட்சத்து 98 ஆயிரத்து 335 வேட்பாளர்கள் மனு அளித்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.