இந்திய தணிக்கை குழுவால் ஏ சான்றிதழ் வழங்கப்பட்ட படங்களை பார்க்க சிறுவர்களை அனுமதித்தால் கடும் தண்டனை வழங்கப்படும் என திரையரங்குகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் பல மொழி திரைப்படங்களும் வெளியாகும் நிலையில் அவற்றை எந்த விதமான பார்வையாளர்கள் பார்க்கலாம் என்பதை தணிக்கை குழு முடிவு செய்து திரைப்படங்களுக்கு யு, யு/ஏ, ஏ உள்ளிட்ட சான்றிதழ் வழங்குகிறது. இதில் அதீத ஆபாசம், வன்முறை காட்சிகள் கொண்ட படங்களுக்கு ஏ சான்றிதழ் வழங்கப்படுகிறது.
இந்த ஏ சான்றிதழ் படங்களை பார்க்க 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களை அனுமதிக்க கூடாது என்று விதிகள் உள்ளது. ஆனாலும் பல திரையரங்குகள் இந்த விதிகளை மீறி சிறுவர்களை அனுமதிப்பதாக குற்றச்சாட்டு உள்ளது. இதுகுறித்து திரையரங்குகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ள தணிக்கை வாரியம், விதிகளை மீறி சிறுவர்களை அனுமதிக்கும் திரையரங்குகளின் உரிமையாளர்களுக்கு 3 ஆண்டுகள் சிறை மற்றும் 1 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்துள்ளது.