Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

மாணவர்களிடம் முழுமையாக கல்வி கட்டணம் வசூலிப்பதா.? தனியார் பள்ளிகளுக்கு அன்புமணி கண்டனம்..!!

Anbumani

Senthil Velan

, வெள்ளி, 31 மே 2024 (12:01 IST)
கல்வி உரிமைச் சட்டப்படி சேரும் எந்த மாணவரிடமும் பள்ளி நிர்வாகங்கள் கட்டணம் வசூலிக்க தடை விதிக்க வேண்டும் என்றும் அதையும் மீறி கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
 
இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், தமிழ்நாட்டில், கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின்படி, தனியார் பள்ளிகளில் ஏழைக்குழந்தைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 25% இடங்களுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ள நிலையில், அவர்களிடம் முழுமையான கல்விக்கட்டணத்தைக் கேட்டு பள்ளி நிர்வாகங்கள் நெருக்கடி கொடுப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.
 
பள்ளிகளுக்கான கட்டணத்தை அரசே செலுத்தும் நிலையில், பெற்றோரிடம் தனியாக கட்டணம் வசூலிக்க தனியார் பள்ளிகள் முயல்வது கண்டிக்கத்தக்கதாகும்.இந்திய நாடாளுமன்றத்தில் 2009&ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின்படி, தனியார் பள்ளிகளில் மழலையர் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை, ஒவ்வொரு வகுப்பிலும் 25% இடங்கள் அப்பகுதியில் வாழும் ஏழைக் குழந்தைகளுக்கு ஒதுக்கப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
 
இந்த இடங்களில் சேரும் மாணவர்களுக்கான கல்விக்கட்டணத்தை மத்திய அரசு வழங்கும் நிதியைக் கொண்டு மாநில அரசுகள் செலுத்தும். தமிழ்நாட்டில் ஏறக்குறைய 8,000 தனியார் பள்ளிகளில் மொத்தம் ஒரு லட்சம் மாணவர் சேர்க்கை ஒதுக்கப்பட்டு, அந்த இடங்களுக்கு பல்வேறு விதிகளின்படி குலுக்கல் முறையில் மாணவர்கள் தேர்தெடுக்கப்படுகின்றனர்.
 
அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கான சேர்க்கை நடைபெறும் போது தான் அவர்களிடம் கட்டணம் கோரப்படுகிறது என்ற உண்மை வெளியாகியுள்ளது.பல தனியார் பள்ளிகளில், கல்வி உரிமைச் சட்டப்படி சேர்க்கப்படும் மாணவர்களும் முழுக் கட்டணத்தை செலுத்த வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்படுகின்றனர்.
 
இது சட்டவிரோதம் ஆகும். நிர்வாகங்களின் மிரட்டலுக்கு பணிந்து கட்டணம் செலுத்தும் பெற்றோர்களுக்கு அதற்கான ரசீது வழங்கப்படுவதில்லை.இதை கண்காணிக்க வேண்டிய மாவட்டக் கல்வி அதிகாரிகளும் தனியார் பள்ளிகளுக்கு ஆதரவாக செயல்படுவதால், பள்ளிகளின் கட்டணக் கொள்ளையைத் தடுக்க முடியவில்லை.
 
இதனால், கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் இடம் கிடைத்தாலும் கூட, கட்டணம் செலுத்த வழி இல்லாததால் அந்த இடத்தில் சேர முடியாத நிலைக்கு ஏழைக் குழந்தைகள் தள்ளப்பட்டுள்ளனர். அதே பள்ளியில் படிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ள குழந்தைகளின் பெற்றோரோ, கடன் வாங்கிக் கல்விக் கட்டணத்தை கட்டி வருகின்றனர்; அதனால் ஏராளமான பெற்றோர்கள் கடனாளியாகியுள்ளனர்.
 
கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின்படி சேர்க்கப்படும் மாணவ, மாணவியரிடம் கல்விக் கட்டணம் கட்டாயப்படுத்தி வசூலிக்கப்படுவதை தனியார் பள்ளிகளின் நிர்வாகிகள் அதிகாரப்பூர்வமற்ற வகையில் ஒப்புக்கொள்கின்றனர். தங்களின் செயலை நியாயப்படுத்த அவர்கள் சில காரணங்களையும் கூறுகின்றனர்.
 
2021&22 முதல் 2025-26 வரையிலான காலத்திற்கு மழலையர் வகுப்புகளுக்கான ஆண்டுக் கட்டணம் ரூ.6000 ஆக குறைக்கப் பட்டு விட்டது.1 முதல் ஐந்தாம் வகுப்புகளுக்கு ரூ.12,659, 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை ரூ.16,477 என்ற அளவுக்கு குறைத்து கல்விக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்த இழப்பை ஈடு செய்யவே கல்வி உரிமைச் சட்ட மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்கப்படுவதாக பள்ளிகள் தரப்பில் கூறப்படுகிறது.
 
தனியார் பள்ளி நிர்வாகங்கள் கூறும் காரணம் அவர்களுக்கு வேண்டுமானால் நியாயமாக இருக்கலாம். ஆனால், அது ஏழைக் குழந்தைகளின் கல்வி உரிமையை பறிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. கல்வி பெறும் உரிமைச் சட்டப்படி அரசு வழங்கும் கட்டணம் குறைக்கப்பட்டால், அதை எதிர்த்து அரசிடம் முறையிடலாம், நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து சட்டப் போராட்டம் நடத்தலாம்? அதை விடுத்து அரசிடமும் கட்டணம் வாங்கிக் கொண்டு, ஏழைக் குழந்தைகளையும் கட்டணம் செலுத்தும்படி கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாத அநீதி ஆகும். இதை அரசும் வேடிக்கை பார்ப்பதை அனுமதிக்க முடியாது.
 
கல்வி உரிமைச் சட்டப்படி தேர்வு செய்யப்பட்ட மாணவ, மாணவியர் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பள்ளிகளில் சேர்ந்து பயில்வதையும், அவர்களிடம் எந்தக் கட்டணமும் வசூலிக்கப்படாமல் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டியது அரசின் கடமை ஆகும். கல்வி உரிமைச் சட்டப்படி பள்ளிகளுக்கு வழங்கப்பட்டு வந்த கட்டணம் குறைக்கப்பட்டதையும் ஏற்றுக் கொள்ள முடியாது.

 
இது தொடர்பாக தனியார் பள்ளி நிர்வாகங்களை அரசு அழைத்து பேசி, இந்தச் சிக்கலுக்கு தீர்வு காண வேண்டும். கல்வி உரிமைச் சட்டப்படி சேரும் எந்த மாணவரிடமும் பள்ளி நிர்வாகங்கள் கட்டணம் வசூலிக்க தடை விதிக்க வேண்டும். அதையும் மீறி கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல்.. ஒருசில மணி நேரத்தில் மிரட்டல் விடுத்தவர் கைது..!