சென்னை மாநகராட்சி நிதிநிலை அறிக்கையில் 250 மாநகராட்சி பள்ளிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
2024-25 ஆம் ஆண்டிற்கான சென்னை மாநகராட்சி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. சென்னை ரிப்பன் மாளிகையில் மேயர் பிரியா நிதிநிலை தாக்கல் செய்த அறிக்கையில், 82 புதிய அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளன. கல்வித்துறையில் மட்டும் 27 அறிவிப்புகள் அறிவித்தார் சென்னை மாநகராட்சி மேயர்.
மாநகராட்சி பள்ளி மாணவர்களை கல்வி சுற்றுலா அழைத்துச் செல்ல 45 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பள்ளி சீருடைகள் வாங்க நிதி ஒதுக்கீடு:
சென்னை மாநகராட்சி 1.20 லட்சம் பள்ளி மாணவர்களுக்கு இரண்டு செட் சீருடைகள் வழங்கப்படும் என்றும் பள்ளி சீருடைகள் வாங்குவதற்காக 8.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
பள்ளி மாணவர்களின் பாதுகாப்புக் கருதி இரண்டாம் கட்டமாக 250 மாநகராட்சி பள்ளிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளது
என்.சி.சி மாணவர்களுக்கு சீருடை:
சென்னை மாநகராட்சி பள்ளிகளில் என்.சி சி மாணவ மாணவிகளுக்கு 66 லட்சம் மதிப்பீட்டில் சீருடைகள் வழங்கப்படும் என்று நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு ஒரு ஷூ, இரண்டு செட் சாக்கஸ் வழங்கப்படும். 35 லட்சம் செலவில் வளர் இளம் பிள்ளைகள் ஆலோசனை வழங்க 10 ஆலோசகர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது
உடற்கல்வியை மேம்படுத்த நிதி ஒதுக்கீடு:
உடற்கல்வியில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு தேவையான உபகரணங்கள் மற்றும் பயிற்சி அளிக்க தகுதி வாய்ந்த பயிற்சியாளர்கள் தொகுப்பூதிய முறையில் பணி அமர்த்துதல், அவர்களை போட்டிகளுக்கு சென்று வரும் செலவு 30 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி:
தொடக்க மற்றும் நடுநிலை பள்ளியில் பயிலும் மாணவ மாணவர்களுக்கு மொழி பாடங்களில் எழுத்து திறனை வளர்க்க ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க 50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ், ஆங்கிலம் மற்றும் கணக்கு தெளிவாக மகிழ்ச்சியுடன் உற்சாகத்துடன் கற்று கொள்ள ஏதுவாக உபகரணங்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
10 ஆம் வகுப்பு பயின்று அதிக மதிப்பெண்கள் பெற்று 11 ஆம் வகுப்பினை சென்னை மாநகராட்சி பள்ளியில் தொடரும் மாணவர்களை 50 பேர் தேர்ந்தெடுக்கபட்டு இஸ்ரோ உள்ளிட்ட தேசிய அறிவியல் சார்ந்த மையங்கள் அழைத்து செல்ல 50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில் மாமன்ற உறுப்பினர்களை தலைவர்களாக கொண்டு குழந்தைகள் பாதுகாப்பு மையம் அமைக்கப்படும் என்றும் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 1 முதல் 12 வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மக்கும் மற்றும் மக்காத குப்பை குறித்து விழிப்புணர்வு வகுப்புகள் நடத்தப்படும் என்றும் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர் வருகையை 95 சதவீதம் மேல் உயர்த்திடும் பள்ளிகளுக்கு "excellence school" சான்றிதழ் வழங்கப்படும் என்றும் மழலையர் வகுப்பை நிறைவு செய்யும் சென்னை பள்ளி மாணவர்களுக்கு "kindergaraden graduation" மழலையர் பட்டமளிப்பு வழங்கப்படும் என்றும் சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது. மாணவர்களின் உளவியல் பிரச்சனைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.