சென்னையில் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள தன்னார்வலர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கையாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தலைநகரான சென்னையில் கொரோனா தடுப்பு ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டு வருகின்றன.
மக்கள் கூடும் இடங்களில் கிருமி நாசினி தெளித்தல், வீடுகளில் கொசுப்புழுக்களை ஆய்வு செய்யும் பணி, மக்களுக்கு சளி, இறுமல், காய்ச்சல் இருக்கின்றனவா என்பதை ஆய்வு செய்யும் பணி என பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும் வீடற்றவர்கள், ஆதரவற்றவர்களை சமூக கூடங்களில் தங்க செய்து உணவளித்தும் வருகின்றனர். இந்நிலையில் கணக்கெடுப்பு பணிகள், கொரோனா தடுப்பு நடவடிக்கை பணிகளை மேற்கொள்ள ஊழியர்களை தவிர்த்து மேலும் பலர் தேவைப்படுகின்றனர்.
இதனால் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் சென்னை மாநகராட்சிக்கு உதவ விரும்பும் தன்னார்வலர்கள், சமூக செயற்பாட்டாளர்களுக்கு சென்னை மாநகராட்சி அழைப்பு விடுத்துள்ளது. www.chennaicorporation.gov.in என்ற இணையதளத்தில் உள்ள கோவிட்19 தன்னார்வலர்கள் பதிவு பகுதியில் விருப்பம் உள்ளவர்கள் தங்கள் விவரங்களை பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.