தமிழகமெங்கும் கொரோனா பாதிப்புகள் 5 ஆயிரத்தை தாண்டியுள்ள நிலையில், சென்னையில் மட்டுமே 2 ஆயிரத்திற்கும் அதிகமான கொரோனா பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன.
தமிழகத்தின் தலைநகரான சென்னை தற்போது கொரோனா ஹாட்ஸ்பாட்டாக மாறியுள்ளது. நாள்தோறும் மற்ற மாவட்டங்களை விட சென்னையில் பாதிப்பு அதிகரித்து வருகிறது. மேலும் மற்ற மாவட்டங்களை விட சென்னையில் பலி எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது. இன்றைய ஒரே நாளில் கொரோனாவுக்கு 4 பேர் பலியாகியிருப்பது சென்னையில் கொரோனாவின் வீரியத்தை காட்டுவதாக உள்ளது.
மற்ற மாவட்டங்களை விட சென்னையில் கொரோனா பாதிப்பு இவ்வளவு அதிகமானது ஏன்? என்பதே பலரது கேள்வியாக இருக்கிறது. இதுகுறித்து பல்வேறு கருத்துக்களை நிபுணர்கள் முன்வைக்கும் நிலையில் மக்களிடையேயும் பலவிதமான கருத்துகள் நிலவி வருகின்றன. சென்னையில் கொரோனா தீவிரமடைய முக்கிய காரணியாக கருதப்படுவது கோயம்பேடு மார்க்கெட். ஊரடங்கு நாள் அறிவிக்கப்பட்டது தொடங்கி ஒருநாள் கூட கோயம்பேடு சந்தையில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்படவில்லை என காவல்துறை ஆணையர் கூறியிருந்த நிலையில், சமூக இடைவெளி கடைபிடிக்கப்படவில்லை என தெரிந்து தீவிரமடையும் வரை நடவடிக்கை எடுக்காமல் இருந்தது ஏன் என்ற கேள்விகளும் பொது மக்களிடையே எழுந்துள்ளன.
மேலும் பலர் கோயம்பேடு மார்க்கெட்டிற்கு வெளிமாநிலங்களில் இருந்து காய்கறி கொண்டு வந்தவர்கள் மூலம் கோயம்பேடு சந்தை விற்பனையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கொரோனா பரவியிருக்கலாம் என்ற பேச்சும் மக்களிடையே நிலவி வருகிறது. எது எப்படி இருப்பினும் கோயம்பேடு ஹாட்ஸ்பாட்டால் சென்னை மட்டுமல்லாது சுற்றியுள்ள கடலூர், விழுப்புரம் மற்றும் காஞ்சிபுரம் பகுதிகளும் பாதிப்பை சந்தித்துள்ளன.
சென்னையில் இவ்வளவு வேகமாக கொரோனா பரவ இரண்டு காரணங்களை சமூக ஆர்வலர்கள் முன்வைக்கின்றனர். முதலாவது சென்னை மாநிலத்தின் தலைநகரம் மட்டுமல்லாது மாநிலத்தின் மிகப்பெரும் பொருளாதார மற்றும் வணிக மண்டலமாகவும் இருக்கிறது. வெளிமாநிலங்களிலிருந்து தொழில் நிமித்தமாக வருபவர்கள் தொடங்கி, வெளி நாடுகளிலிருந்து வருபவர்கள் என ஒரு நாளைக்கு சென்னைக்குள் மட்டும் ரயில்கள் மற்றும் விமானங்கள் வழியாக ஆயிரக்கணக்கான வெளி மாநில மற்றும் வெளி மாவட்ட மக்கள் வந்து செல்லும் பகுதியாக சென்னை உள்ளது. மார்ச் மாத இறுதியில் சென்னை உள்ளிட்ட தமிழக மாவட்டங்கள் அனைத்திலும் ஊரடங்கு அமலுக்கு வந்தாலும், உலக நாடுகள் பலவற்றில் ஜனவரி மாதத்திலேயே கொரோனா பாதிப்புகள் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அப்படியிருக்க ஏறத்தாழ இரண்டரை மாத காலங்களுக்கு இங்கிருந்து வெளிநாடுகள் சென்றவர்கள், அங்கிருந்து வந்தவர்கள் முதலானவர்கள் குறித்து ஆரம்ப கட்டத்திலேயே அரசு ட்ராக்கிங் செய்ய தொடங்கியிருக்க வேண்டும். மேலும் ட்ராக்கிங் முறையிலும் அவர் சென்ற இடங்களை அவர் நினைவு கூர்ந்து சொல்லுவதன் மூலம் கண்டறியலாமே ஒழிய ஒருவர் விமான நிலையத்திலிருந்து வாடகை டாக்சியில் பயணித்திருந்தார் என்றால் அந்த டாக்ஸி ட்ரைவரை ட்ராக் செய்வது இயலாத காரியம். அவரது தொடர்பு பட்டியலில் இப்படி சில நபர்கள் விடுபட வாய்ப்பு உண்டு. ஆகவே ட்ராக்கிங் முறை ஓரளவு தொடர்புடையவர்கள் கண்டுபிடிக்க உதவுமே தவிர முழுவதுமான உத்தரவாதம் அளிக்கும் நிலையில் இல்லை என்பது சமூக ஆர்வலர்கள் சிலரது வாதம்.
இரண்டாவது காரணம் மக்கள் நெரிசல். தமிழகத்திலேயே குறைந்த பரப்பளவில் மக்கள் அதிகம் வாழும் பகுதியாக சென்னை உள்ளது. இந்திய அளவில் அதிக மக்கள் நெரிசல் உள்ள பகுதிகளில் மும்பை, கொல்கத்தாவிற்கு பிற்கு சென்னை உள்ளது. இப்படியான மக்கள் நெரிசல் உள்ள பகுதிகளில் கொரோனா பரவுவது மற்ற இடங்களை விட அதிகமாக இருக்கும் என்பது ஒரு சாரரின் வாதம். வெளிநாடுகளில் தெருக்கள், நகரங்களுக்கு அரசே குறிப்பிட்ட கட்டமைப்பை நிர்ணயிப்பது போன்ற அம்சங்கள் இந்தியாவில் கிடையாது. நில உரிமையாளர்கள் தங்களக்கு உட்பட்ட நிலப்பகுதியில் எப்படி வேண்டுமானாலும் வீடுகளை கட்டிக்கொள்ள முடியும். பல தளங்கள் கொண்டு வீடு கட்டுதல், அடுக்குமாடி குடியிருப்புகள் போன்றவை கட்டும்போதுதான் அனுமதிகளுக்கு அவசியமாகிறது. இதனால் சில மேற்கத்திய நாடுகளின் வீதிகளில் குறிப்பிட்ட இடைவெளியில் ஒரே மாதிரியாக வீடுகள் கட்டப்பட்டது போன்ற சூழல் சென்னை போன்ற நகரங்களில் இல்லாமல், ஒரு வீட்டிற்கும் மற்றொரு வீட்டிற்கும் மீட்டர் கணக்கில் கூட இடைவெளி இல்லாமல் உள்ளது. இதனால் நெருக்கமான தெருக்கள், வீதிகள் சுகாதார ரீதியான பிரச்சினையை அனுதினமும் எதிர்கொண்டு வருகின்றன. இந்த இடைவெளியற்ற நெரிசலான தன்மை கொரோனா போன்ற வைரஸ்கள் பரவுவதற்கு மிகவும் ஏதுவான சூழலாக மாறிவிடுகின்றன.
இதையெல்லாம் தாண்டி மக்களிடையே விழிப்புணர்வு இல்லாதது பெரிய பிரச்சினையாக உள்ளது. முழு ஊரடங்கு அமல்படுத்தியதற்கு முன் தினம் கடைகளிலும் வீதிகளிலும் கூடிய மக்கள் கூட்டம் ஒரு உதாரணம். மக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்தல் மற்றும் தேவையினறி வெளியே வராமல் இருத்தல் போன்ற விதிமுறைகளை பல சமயம் காற்றில் பறக்கவிட்டு விடுகின்றனர். இதுதவிர அதிகமான மக்கள் வரத்து கொண்ட மாநகரத்தின் மக்கள் தங்கள் அத்தியாவசிய தேவைக்கு வெளியே வந்துதான் ஆக வேண்டும் என்னும் நிலையில் மொத்த மக்கள் தொகையில் குறிப்பிட்ட சதவீதத்தினர் வெளியே சென்று வர அனுமதிக்கப்பட்டாலுமே அது வைரஸ் தொற்றுக்கு போதிய காரணியாக அமைந்துவிடும் வாய்ப்புகள் உள்ளது. நாளுக்கு நாள் சென்னையில் கொரோனா தொற்றுகள் அதிகரித்து வரும் நிலையில் மதுபானக்கடைகள் சென்னையில் செயல்படாதது மேலும் கொரோனா தொற்று அதிகரிக்காமல் தடுக்க வாய்ப்பாக உள்ளது. ஆனால் ஊரடங்கும் முடியும் குறிப்பிட்ட நாளான மே 17க்குள் சென்னை சகஜ நிலைக்கு திரும்புதல் சாத்தியம் இல்லை என்பதே பலரது கூற்றாக உள்ளது.