நான்கு ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் இருந்து ஹாங்காங் பகுதிக்கு நேரடி விமான சேவை இன்று முதல் தொடங்கியுள்ளதை அடுத்து விமான பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பல விமான சேவைகள் நிறுத்தப்பட்டது என்பதும் அதில் ஒன்றுதான் சென்னை ஹாங்காங் இடையே இயக்கப்படும் விமானம் நிறுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது சென்னை ஹாங்காங் இடையே கேத்தே பசிபிக் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தை இன்று முதல் இயக்க உள்ளது. நான்காண்டு இடைவெளிக்கு பிறகு சென்னையில் இருந்து ஹாங்காங் நேரடியாக செல்ல இந்த விமானத்தை பயன்படுத்தி கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது புதன் வெள்ளி ஞாயிறு ஆகிய மூன்று நாட்கள் மட்டும் சென்னையில் இருந்து ஹாங்காங் பகுதிக்கு விமானம் இயக்கப்பட இருப்பதாகவும் விரைவில் தினசரி விமானமாக இயக்கப்பட இருப்பதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜப்பான், தென் கொரியா உள்ளிட்ட நாடுகளுக்கு செல்லும் பயணிகளுக்கு இந்த விமானம் இணைப்பு விமானமாக பயன்படும் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் சென்னை - மொரிசியஸ் இடையே நேரடி விமான சேவை வரும் ஏப்ரல் மாதத்தில் இருந்து தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.