Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

எந்த கட்சிகள் எந்த அணியில்? எந்த தூண்டிலில் எந்த மீன்? – ஒரு அரசியல் பார்வை!

Advertiesment
Party Flags

J.Durai

, வெள்ளி, 2 பிப்ரவரி 2024 (08:29 IST)
தி.மு.க., - காங்கிரஸ் ஒரு அணியாக களம் காண உள்ள நிலையில், இந்த கூட்டணிக்கு எதிராக அ.தி.மு.க. பலம் வாய்ந்த கூட்டணியை உருவாக்க காய் நகர்த்தி வருகிறது.


 
இது தொடர்பாக பா.ம.க., தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சிகளுடன் அந்த கட்சி ரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. அதே நேரத்தில் பா.ஜ.க., கூட்டணியில் இருந்து வெளியேறி உள்ள அ.தி.மு.க.வை தனிமைப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் பா.ஜ.க., கட்சி கூட்டணி பேச்சுவார்த்தையை ரகசியமாக நடத்தி முடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கடந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க., கூட்டணியில் இடம் பெற்றிருந்த பா.ம.க., தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சிகளுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் அந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்பட உள்ளது என்பது பற்றிய பரபரப்பான தகவலும் வெளியாகி இருக்கின்றன.

பா.ஜ.க., கூட்டணியில் பா.ம.க.,வுக்கு ஸ்ரீபெரும்புதூர், ஆரணி, மயிலாடுதுறை, தர்மபுரி, விழுப்புரம், கடலூர், அரக்கோணம் ஆகிய 7 தொகுதிகள் ஒதுக்குவதற்கு முடிவு செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த தொகுதிகள் பா.ம.க., வலுவாக உள்ள தொகுதிகளாகும். இது தொடர்பாக இறுதி முடிவு விரைவில் எடுக்கப்பட்டு அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பா.ஜ.க., கூட்டணியில் இடம் பெற்று வெற்றி பெறும் பட்சத்தில் மத்திய மந்திரி பதவியையும் கேட்டு பெற்று விடலாம் என்று பா.ம.க., கணக்கு போட்டுள்ளது.

Party Flags

 
இதே போன்று தே.மு.தி.க.,வுடனும் தொகுதி பங்கீடு தொடர்பான ரகசிய பேச்சுவார்த்தையை பா.ஜ.க., கட்சி நடத்தி முடித்திருப்பதாகவும், கூட்டணியில் 2 தொகுதிகளை தே.மு.தி.க.,வுக்கு ஒதுக்க முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. தே.மு.தி.க.,வுக்கு கள்ளக்குறிச்சி தொகுதியை ஒதுக்குவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

இன்னொரு தொகுதி எது என்பது இன்னும் முடிவாகவில்லை. பாராளுமன்ற தேர்தலில் மேல்சபை எம்.பி., பதவி ஒன்றை கேட்டு பெற வேண்டும் என்பதில் தே.மு.தி.க., நிர்வாகிகள் உறுதியாக உள்ளனர்.

இதுவும் ரகசிய கூட்டணி பேச்சுவார்த்தையில் உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. விஜயகாந்தின் மறைவுக்கு பிறகு மத்திய அரசு சார்பில் அவருக்கு தொடர்ச்சியாக பல்வேறு மரியாதைகள் செய்யப்பட்டுள்ளன.

Party Flags

 
பிரதமர் மோடி, விஜயகாந்தை தனது நெருங்கிய நண்பர் என்று புகழ்ந்து பேசி அறிக்கை வெளியிட்டிருந்தார். பத்ம விருதும் விஜயகாந்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இது மத்திய அரசின் மீதும், பிரதமர் மோடி மீதும் தே.மு.தி.க.,வினருக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.

அதே நேரத்தில் மத்தியில் பாரதிய ஜனதா கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் எம்.பி., தேர்தலில் வெற்றி பெற்று கட்சியை வளர்ப்பதற்கு அது உதவும் என்றும் தே.மு.தி.க.,வினர் நம்புகிறார்கள்.

இது போன்ற காரணங்களால் தே.மு.தி.க.,வும் பா.ஜ.க., கூட்டணியில் சேரும் முடிவை எடுத்திருப்பதும் தெரிய வந்துள்ளது.

டி.டி.வி.தினகரனின் அ.ம.மு.க.,வும் பாரதிய ஜனதா கூட்டணியில் இடம் பெறுவது உறுதியாகி உள்ளது. திருச்சி, சிவகங்கை ஆகிய 2 தொகுதிகள் இந்த கட்சிக்கு ஒதுக்கப்பட உள்ளன. அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டுள்ள ஓ.பன்னீர் செல்வத்துக்கு தேனி தொகுதி ஒதுக்கப்பட உள்ளது.  இந்த தொகுதியில் ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் போட்டியிடுவார் என்று தெரிகிறது.

Party Flags

 
பாராளுமன்ற தேர்தலில் இணைந்து செயல்பட போவதாக இருவரும் ஏற்கனவே தெரிவித்துள்ளனர்.  எனவே, பாரதிய ஜனதா கூட்டணியில் இணைந்து எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க.,வை தேர்தலில் வீழ்த்த வேண்டும் என்பதே இவர்களின் கணக்காக உள்ளது.

இதற்கு பாரதிய ஜனதா கூட்டணியை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதால் இருவருமே உறுதியாக உள்ளனர். பாரிவேந்தருக்கு பெரம்பலூர் தொகுதியும், ஏ.சி. சண்முகத்துக்கு வேலூர் தொகுதியும், ஜி.கே.வாசனுக்கு தஞ்சை தொகுதியும். தேவநாதயாதவுக்கு ஒரு தொகுதியும்  ஒதுக்கப்பட வாய்ப்பு உள்ளது.

இப்படி பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு 16 தொகுதிகளை ஒதுக்கியது போக மீதமுள்ள 23 தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி போட்டியிட முடிவு செய்துள்ளது.

இதன் மூலம் பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு கடும் போட்டியை ஏற்படுத்துவதோடு அ.தி.மு.க., பக்கம் எந்த கட்சிகளும் சேரவிடாமல் செய்து விடலாம் என்பதே பாரதிய ஜனதா கட்சி போடும் திட்டமாக உள்ளது.

Party Flags

 
திரைமறைவில் நடந்துள்ள இந்த தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் விரைவில் நேரடியாக நடத்தப்பட்டு இறுதி முடிவு எடுக்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதுபோன்ற ஒருநிலை எட்டப்பட்டு விட்டால் அடுத்த மாதம் பிரதமர் மோடி திருப்பூர் மாவட்டம் பல்லடத்துக்கு தேர்தல் பிரசாரத்துக்காக வரும் போது கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரையும் ஒரே மேடையில் ஏற்றி பிரமாண்ட பிரசாரத்தை தொடங்கவும் பாரதிய ஜனதா கட்சி வியூகம் வகுத்துள்ளது. அடுத்த மாதம் தொடக்கத்தில் பாரதிய ஜனதா தலைவர் ஜெ.பி. நட்டா, மத்திய மந்திரி அமித்ஷா, ராஜ்நாத் சிங் ஆகியோர் தமிழகம் வருகிறார்கள்.

அப்போது தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகளை முடிப்பதற்கான ஆயத்த பணிகளை மேற்கொள்ளவும் பாரதிய ஜனதா கட்சி திட்டமிட்டு உள்ளது.

Updated by Prasanth.K

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

2500 ஊழியர்களை பணிநீக்கம் செய்கிறது PayPal நிறுவனம்.. மீண்டும் தொடர் பணிநீக்கம்..!