துவக்கம் முதலே திமுக வேட்பாளர்கள் முன்னிலை பெற்று வந்த நிலையில் சென்னை மாநகராட்சி மீண்டும் திமுக வசம் செல்கிறது.
தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த பிப்ரவரி 19 ஆம் தேதி ஒரே கட்டமாக நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள், அதிமுக, பாமக, பாஜக, மநீம, நாதக, விஜய் மக்கள் இயக்கம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் போட்டியிட்டன. தற்போது உள்ளாட்சி தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. துவக்கம் முதலே திமுக வேட்பாளர்கள் முன்னிலை பெற்று வந்தனர்.
இந்நிலையில் 134 வார்டுகளில் நடைபெற்று முடிந்த வாக்கு எண்ணிக்கை முடிவில் 116 இடங்களில் திமுக வெற்றி பெற்று முன்னிலையில் உள்ளது. அதிமுக 13 இடங்களிலும், பிற கட்சிகள் 5 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. இதன் மூலம் சென்னை மாநகராட்சி மீண்டும் திமுக வசம் செல்கிறது. கடந்த 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அதிமுக முதல் முறையாக சென்னை மாநகராட்சியை கைப்பற்றியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.