சென்னை மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்காக அமைக்கப்பட்ட நடைபாதையை பொதுமக்கள் பயன்படுத்தி வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஆசியாவின் மிகப்பெரிய கடற்கரையாக விளங்கும் மெரினா கடற்கரையில் மாற்று திறனாளிகளும் சென்று கடலை பார்க்கும் விதமாக நடைபாதை அமைக்கப்பட்டு சமீபத்தில் திறந்து வைக்கப்பட்டது. இந்த பாதையில் மாற்று திறனாளிகள் மட்டுமே செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்த நிலையிலும் தொடர்ந்து பொதுமக்கள் அதில் நடந்து செல்வது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
காலையில் மெரினா பீச்சில் நடைபயிற்சி செல்பவர்கள் இந்த மாற்றுத்திறனாளிகள் பாதையை பயன்படுத்துவதால் அது விரைவில் சேதமடையக்கூடும் என பலரும் புகார் அளித்ததை தொடர்ந்து காவலர்கள் பொதுமக்களை பாலத்திலிருந்து அப்புறப்படுத்தியுள்ளனர். இந்த பிரச்சினைக்கு சரியான தீர்வு காணப்பட வேண்டும் என்பது பலரது கோரிக்கையாக உள்ளது.