சென்னையில் போக்குவரத்து விதிமீறல்கள் மற்றும் விபத்துகளை தடுக்க ஹெல்மெட் இல்லாவிட்டால் பெட்ரோல் கிடையாது என்ற புதிய கட்டுப்பாட்டை அமல்படுத்த உள்ளனர்.
சென்னையில் போக்குவரத்து நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் விபத்துகளும் பெருகி வருகின்றன. இதனால் பயணிகள் சீட் பெல்ட் அணிவது, ஹெல்மெட் அணிவது போன்றவற்றை முறையாக பின்பற்ற வேண்டும் என போக்குவரத்து காவல்துறை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனாலும் பலர் விதிகளை சரியாக பின்பற்றுவதில்லை. போக்குவரத்து காவலர்கள் கண்காணிக்கும் பகுதிகள் தவிர்த்து வேறு பகுதிகளில் வாகன ஓட்டிகள் சீட் பெல்ட் அணியாமலே பயணித்து வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை மாநகர போக்குவரத்து காவல் ஆணையர் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி சென்னையில் உள்ள பெட்ரோல் பங்குகளில் வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணியாமலோ, சீட்பெல்ட் அணியாமலோ வந்தால் பெட்ரோல், டீசல் கிடையாது என்னும் புதிய கட்டுப்பாட்டை கொண்டு வர உள்ளனர். No Helmet No Petrol என்ற இந்த திட்டத்தின் மூலம் பலர் ஹெல்மெட் அணிய விழிப்புணர்வு ஏற்படுத்த முடியும் என நம்பப்படுகிறது.