சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் 13 ஆம் தேதி முதல் ரேசன் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என அறிவிப்பு.
அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நியாய விலைக்கடை பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக பொது மக்கள் பாதிக்காத வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள கூட்டுறவுத் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
குறிப்பாக மாற்று பணியாளர்களை கொண்டு ரேஷன் கடைகள் செயல்படுவதை உறுதி செய்ய அந்தந்த மண்டல இணைப்பதிவாளர் அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழ்நாட்டில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களை தவிர்த்து 30-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் ரேசன் கடை ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம் செய்து வருகின்றனர். எனவே சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களிலும் 13 ஆம் தேதி முதல் ரேசன் ஊழியர்கள் கடைகளை திறக்காமல் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வடசென்னையில் 878 ரேசன் கடை, தென் சென்னையில் 888 கடை, காஞ்சிபுரம் மாவட்டத்தில் 635, செங்கல்பட்டு மாவட்டத்தில் 841, திருவள்ளூர் மாவட்டத்தில் 1117 ரேசன் கடைகள் உள்ளன. இந்த கடைகளில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவரும் போராட்டத்தில் பங்கேற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.