ஆன்லைன் கிரிக்கெட்டில் லட்சக்கணக்கில் நஷ்டம்: சென்னை இளைஞர் தற்கொலை!
ஆன்லைன் கிரிக்கெட் விளையாடி இலட்சக்கணக்கில் நஷ்டமடைந்த சென்னை இளைஞர் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
சென்னை கொடுங்கையூர் என்ற பகுதியைச் சேர்ந்த தியாகராஜன் என்ற இளைஞர் சலூன் கடை நடத்தி வந்துள்ளார். அவர் ஓய்வு நேரத்தில் பொழுதுபோக்கிற்காக ஆன்லைனில் வரும் அனிமேஷன் கிரிக்கெட் விளையாட்டை விளையாடினார். ஒரு கட்டத்தில் அந்த விளையாட்டில் மூழ்கிய தியாகராஜன் பணம் வைத்து விளையாட தொடங்கினார்
கையிலிருக்கும் பணம் கரைந்தவுடன் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் 6 லட்ச ரூபாய் வரை கடன் வாங்கி ஆன்லைன் கிரிக்கெட் விளையாடியிருக்கிறார். அந்த பணமும் நஷ்டமானதை அடுத்து மீண்டும் தனியார் நிதி நிறுவனத்தில் 5 லட்ச ரூபாய் வரை கடன் வாங்கி ஆன்லைன் கிரிக்கெட் விளையாடி உள்ளார். அந்த பணத்தையும் அவர் மொத்தமாக இழந்ததாக கூறப்படுகிறது
இந்த நிலையில் நிதி நிறுவனத்தில் வாங்கிய பணத்திற்கு வட்டி மேல் வட்டி கட்டி 13 லட்சம் ரூபாய்க்கு மேல் அவருக்கு கடன் இருந்தது. இந்த நிலையில் நிதி நிறுவனம் அவருக்கு நெருக்கடி தந்ததாக கூறப்பட்ட நிலையில் மன அழுத்தம் காரணமாக தியாகராஜன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது
ஏற்கனவே ஆன்லைன் விளையாட்டை விளையாடி தமிழகத்தில் ஒரு சில இளைஞர்கள் தற்கொலை செய்து கொண்டிருந்த நிலையில் தற்போது சென்னையை சேர்ந்த மேலும் ஒரு இளைஞர் தற்கொலை செய்துகொண்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது இனிமேலாவது அரசு ஆன்லைன் விளையாட்டை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்