பேருந்து கட்டண உயர்வை கண்டித்து திமுகவினரும், பொதுமக்களும் தமிழகம் முழுவதும் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதில் திருவண்ணாமலை மாவட்டத்தில் திமுகவினர் நடந்துகொண்டது பொதுமக்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.
முன்னாள் அமைச்சரும், திமுக மாவட்ட செயலாளருமான எ.வ.வேலு தலைமையில் திருவண்ணாமலையில் போராட்டம் நடைபெற்றது. இந்த மறியல் போராட்டத்தில் கலந்துகொண்ட திமுக உள்ளிட்ட அதன் தோழமை கட்சியினரை காவல்துறையினர் கைது செய்தனர்.
திமுகவினர் 500 பேரை கைது செய்வதாக காவல்துறையினர் வேனில் ஏற்றினர். ஆனால் 200 பேர் நாங்கள் எங்கள் இருச்சக்கர வாகனத்தில் வருகிறோம் என பயணத்தை தொடங்கினர். வழிநெடுகிலும் அவர்கள் அதிமுக அரசுக்கு கோஷங்கள் எழுப்பியவாறு சென்றனர். இடை இடையே வண்டியை நிறுத்தியும் அவர்கள் கோஷமிட்டனர்.
இதனால் அங்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. திமுகவினரின் இந்த செயல் பொதுமக்களை முகம் சுளிக்க வைத்தது. பின்னர் கட்சி பிரமுகர் ஒருவரின் ஏசி திருமணமண்டபத்தில் கைதானவர்கள் அடைக்கப்பட்டனர்.
கைதானவர்களுக்கு மதிய உணவாக சிக்கன் பிரியாணி ஏற்பாடு செய்யப்பட்டது. அவ்வப்போது டீ, காபி, ஸ்னாக்ஸ் கொடுக்கப்பட்டதாம். காவல் துறையினரின் பாதுகாப்பில் இருப்பவர்களுக்கு காவல் துறை தான் உணவு வாங்கி தர வேண்டும்.
ஆனால் அவர்கள் சரியாக வாங்கித்தர மாட்டார்கள் என மாவட்ட திமுகவே ஏற்பாடு செய்துவிட்டது. இதனால் தங்களுக்கு செலவு மிச்சம் என்பதால் காவல்துறையும் திமுகவினர் விருப்பம் போல நடந்துகொண்டது. அதோடு அனுமதி இல்லாமல் 3 கிலோமீட்டர் தூரம் கண்டன பேரணி நடத்த திமுகவினரை அனுமதித்தனர். இதனால் தான் போக்குவரத்து நெரிசல் உருவாகியது.