விழுப்புரத்தில் ஆமைகளை பிடித்து சென்ற சிறுவர்களை கைது செய்துள்ள வனத்துறையினர் 33 ஆமைகளை மீட்டுள்ளனர்.
உலகம் முழுவதிலும் அழிந்து வரும் உயிரினங்களின் பட்டியலில் ஆபத்தான கட்டத்தில் ஆமையினங்கள் உள்ளன. இதனால் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலும் குறிப்பிட்ட வகை ஆமைகளை பிடிப்பது மற்றும் கடத்துவது சட்டவிரோத செயலாக உள்ளது.
இந்நிலையில், விழுப்புரத்தை அடுத்த பாணாம்பட்டு பிரிவு சாலை அருகே வனத்துறையினருக்கு வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் வனத்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அந்த பகுதியில் நான்கு சிறார்கள் கையில் சாக்கு பையுடன் நடந்து வந்ததை கண்டனர்.
அவர்களை அழைத்து விசாரித்ததில் அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து அவரிடம் இருந்து பைகளை பறிமுதல் செய்து சோதனை செய்ததில் ஏறி குளம் கிணறுகளில் பிடிக்கப்பட்ட 33 ஆமைகள் இருந்தது தெரிய வந்தது.
அதனை தொடர்ந்து ஆமைகளை பறிமுதல் செய்து நான்கு சிறார்களையும் கைது செய்து விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். மான் வேட்டையாடுவதற்கு இணையான குற்ற செயல்களில் ஆமை கடத்தலும் ஒன்று என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.