காரைக்காலில் காலரா பரவல் அதிகரித்துள்ளது மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் காலராவில் இருந்து தற்காத்து கொள்ளும் வழிமுறைகள் குறித்து காண்போம்.
காலரா என்றால் என்ன?
காலரா என்ற நோய் “விப்ரியோ காலரே” என்ற பாக்டீரியாவினால் ஏற்படுவதாகும். சுகாதாரமற்ற தண்ணீரால் இந்த காலரா நோய் பெருமளவில் பரவுகிறது.
அறிகுறிகள் என்ன?
காலரா பாதிப்பு ஏற்படும் நபர்களுக்கு வயிற்றுபோக்கு, வாந்தி ஏற்படும். அதனுடன் மயக்கம், காய்ச்சல், உடல் சோர்வு போன்றவையும் ஏற்படும். உடலில் இருந்து அதிகமான நீர் வெளியேறுவதால் முகம், உதடுகள் வறட்சியடைந்து காணப்படும்.
தடுக்கும் வழிமுறைகள் என்ன?
சுகாதாரமற்ற உணவு மற்றும் அசுத்தமான தண்ணீரினால் காலரா பரவுகிறது. முக்கியமாக மழை காலங்களில் காலரா பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.
காலராவிலிருந்து தற்காத்துக் கொள்ள குடிதண்ணீரை சூடாக்கி பின்னர் அருந்த வேண்டும். உணவுகளை அந்தந்த சமயத்திற்கு தேவையான அளவு மட்டும் சமைத்து அப்போதே சாப்பிட வேண்டும்.
காய்கறி, பழங்களை நன்றாக கழுவி சுத்தம் செய்துவிட்டு சாப்பிட வேண்டும்.
திறந்த வெளியில் மலம் கழிப்பதை தவிர்த்து, கழிப்பறைகளை பயன்படுத்த வேண்டும்.
காலரா அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனை அல்லது ஆரம்ப சுகாதார நிலையத்தை அணுக வேண்டும்.