புதுச்சேரியில் எம்ஜிஆர் சிலைக்கு காவி துண்டு அணிவித்த விவகாரம் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
புதுச்சேரியில் எம்ஜிஆர் சிலைக்கு மர்ம நபர்கள் காவி துண்டு அணிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில் தற்போது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் “புதுச்சேரியில் உள்ள எம்ஜிஆர் சிலை காவித்துண்டு அணிவித்து அவமானப்படுத்தப்பட்ட கொடுஞ்செயல் அறிந்து வேதனையடைந்தேன். சமூகத்திற்காக பணியாற்றிய தலைவர்களின் சிலை அவமானப்படுத்தப்படுவது வருத்தத்தை அளிக்கிறது. ஒற்றுமை, சமத்துவத்தை குலைக்கும் வண்ணம் ஓட்டு அரசியலுக்காக சிலர் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். கருத்து சுதந்திரம் என்ற பெயரில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பதை ஏற்க முடியாது. எம்ஜிஆர் சிலையை அவமதித்தவர்கள் மற்றும் அவர்களுக்கு பின்னாலிருந்து செயல்பட்டவர்கள் தோலுரித்து காட்டப்பட வேண்டும். சிலையை அவமதித்தவர்கள் மீது புதுச்சேரி முதல்வர் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என்று கூறியுள்ளார்.