தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியையும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தையும் துக்ளக் இதழின் ஆசிரியரும், ஆடிட்டருமான குருமூர்த்தி சில தினங்களுக்கு முன்னர் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்திருந்தார். இதற்கு எடப்பாடி பழனிச்சாமி தற்போது பதில் அளித்துள்ளார்.
ஆர்கே நகர் இடைத்தேர்தல் தோல்விக்கு பின்னர் எடப்பாடி பழனிச்சாமியும், ஓ.பன்னீர்செல்வமும் இணைந்து தினகரன் ஆதரவு நிர்வாகிகள் சிலரை கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கினர். இது காலம் தாழ்ந்து எடுக்கும் நடவடிக்கை எனவும், அவர்கள் திறமையற்ற தலைவர்கள் எனவும் விமர்சித்திருந்தார் குருமூர்த்தி.
ஆனால் அவர்கள் திறமையற்றவர்கள் என கூறுவதற்கு ஆண்மையற்றவர்கள் என நேரடி பொருள்படக்கூடிய ஆங்கில வார்த்தையை குருமூர்த்தி பயன்படுத்தியிருந்தார். இதனையடுத்து குருமூர்த்தியின் கருத்துக்கு அமைச்சர் ஜெயக்குமார் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தார்.
அதற்கு குருமூர்த்தி தனது கருத்தின் விளக்கத்தையும், அந்த வார்த்தையின் மற்றொரு பொருளையும் கூறினார். ஆனால் குருமூர்த்தியின் இந்த கடுமையான விமர்சனம் குறித்து தொடர்புடைய முதல்வரும், துணை முதல்வரும் பதில் அளிக்காமல் மௌனமாகவே இருந்தார்கள்.
இந்நிலையில் நேற்று கோவையில் செய்தியாளர்களை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்தபோது, அவரிடம் குருமூர்த்தியின் குற்றச்சாட்டு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதில் அளித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அப்படிப்பட்ட பொருளில் கருத்து தெரிவிக்கவில்லை என்று அவரே மறுப்பு தெரிவித்துவிட்டாரே என்று மட்டும் பதிலளித்தார். குருமூர்த்தியின் ஆண்மையற்றவர்கள் என்ற சர்ச்சை சொல்லின் விளக்கத்தை மட்டும் குறிப்பிட்ட முதல்வர் அவர் வைத்த திறமையற்ற தலைவர்கள் என்ற குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்காமல் அதனை ஆமோதிக்கும் விதமாக மௌனமாக சென்றுவிட்டார்.