முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தமிழக அரசின் முதன்மைச் செயலர் பீலா வெங்கடேசன் உடலுக்கு இன்று காலை நேரில் அஞ்சலி செலுத்தினார்.
சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த பீலா வெங்கடேசன், நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 56.
மறைந்த பீலா வெங்கடேசனின் உடல், சென்னை கொட்டிவாக்கத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அங்கு சென்ற முதலமைச்சர் ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள், மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் ஆகியோர் மலரஞ்சலி செலுத்தி மரியாதை செய்தனர்.
1997-ஆம் ஆண்டு ஐஏஎஸ் சேர்ந்த பீலா வெங்கடேசன், பீகார் பிரிவில் இருந்து தமிழ்நாடு பிரிவுக்கு மாறினார். கொரோனா பெருந்தொற்று காலத்தில் சுகாதாரத்துறை செயலராக பணியாற்றியவர், தற்போது எரிசக்தித் துறை முதன்மை செயலராக இருந்து வந்தார். கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது.