சமீபத்தில் நடந்த தமிழக வெற்றி கழகத்தின் மாநில மாநாட்டில் நாங்கள் தனி பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்தாலும் கூட்டணி கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடம் விடுவோம் என்று பேசினார். இந்த நிலையில் காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு எழுதிய கடிதத்தில் தனக்கு அமைச்சரவையில் இடம் வேண்டும் என்று கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர் தனது கடிதத்தில் கூறி இருப்பதாவது:
தமிழக முதல்வரும், இந்தியா கூட்டணி கட்சி தமிழக தலைவருமான மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு வணக்கம். தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் அவர்கள் அவர்களது கட்சி மாநாட்டில் 2026 -ல் நடைபெறுகின்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றால் தங்கள் கட்சி கூட்டணி ஆட்சிக்கு தயார் என பேசியுள்ளார். ஆகவே, தாங்கள் தற்பொழுதே நமது கூட்டணி கட்சிகளுக்கு மந்திரி சபையில் இடம் அளிக்க வேண்டும். கட்சி தொடங்கிய காலம் முதல் கூட்டணி கட்சியின் ஆதரவில் தான் ஆட்சிக்கு வந்துள்ளீர்கள்.
எனவே, தமிழகத்தில் தங்கள் தலைமையில் கூட்டணி ஆட்சி மலர்ந்தால் நல்லது. இதை தான் தமிழக மக்களும் எதிர்பார்க்கிறார்கள். எனவே, தமிழக மக்களின் எண்ணத்தை தாங்கள் நிறைவேற்றி தமிழகத்திற்கு தாங்கள் முனுதாரணமாக திகழ வேண்டும் என்று தமிழக மக்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த கடிதம் குறித்து காங்கிரஸ் வட்டாரங்கள் கூறிய போது இது அவருடைய தனிப்பட்ட கோரிக்கை என்றும் கட்சிக்கும் எதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் அவர் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்யும் என்று கூறி உள்ளனர்