கன்னியாகுமரி மாவட்டத்தில் மாமியார் கொடுமையால் மருமகள் தற்கொலை செய்து கொண்ட நிலையில், கைதுக்கு பயந்த மாமியார் தற்கொலை முயற்சி செய்தார். அவரும் தற்போது பலியாகிவிட்டதாக வெளிவந்துள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் பகுதியில் கார்த்திக் மற்றும் சுருதி பாபு ஆகிய இருவருக்கும் கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் நடந்தது. திருமணத்திற்குப் பிறகு, மாமியார் செண்பகவல்லி மருமகளிடம் பல கட்டுப்பாடுகளை விதித்ததாகவும், அவ்வப்போது துன்புறுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், மாமியாரின் கொடுமைகளை ஆடியோவாக பேசி தனது தாய்க்கு அனுப்பிவிட்டு, சுருதி பாபு கடந்த 21ஆம் தேதி தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்டார். இதனைத் தொடர்ந்து, சுருதி பாபு பெற்றோரின் புகாரின் அடிப்படையில் சுசீந்திரம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். சுருதி பாபு ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
இதையடுத்து, செண்பகவல்லி கைதுக்கு பயந்து விஷம் அருந்தியதாகவும், ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று இரவு அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார் என்றும் கூறப்படுகிறது. சாதாரண மாமியார்-மருமகள் பிரச்சனையில் இருவரும் தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.