சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் குழந்தைகளுக்கான கொரோனா சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.
ஸ்டான்லி மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கான கொரோனா சிறப்பு வார்டு பற்றி தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் உத்தரவுப்படி அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன் அவர்கள் மற்றும் பி.கே.சேகர்பாபு ஆகியோர், சென்னை அரசு ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் திரவ மருத்துவ ஆக்சிஜன் கொள்கலனை திறந்து வைத்து பயன்பாட்டுக்குக் கொண்டுவந்தனர். மேலும், மருத்துவமனையில் மேம்படுத்தப்பட்ட குழந்தைகளுக்கான 40 படுக்கைகள் கொண்ட சிறப்பு தீவிர சிகிச்சை வார்டு மற்றும் 100 படுக்கைகள் கொண்ட வார்டினை தொடங்கி வைத்து பயன்பாட்டுக்குக் கொண்டுவந்தனர்.
அமைச்சர் மா. சுப்பிரமணியன், உலக மருத்துவர் தினம் அன்று, அரசு ஸ்டான்லி மருத்துவமனை குழந்தைகள் நலப் பிரிவுக்கு வருகை தந்து, பல்வேறு மக்கள் நலப்பணிகளை தொடங்கி வைத்தார். இம்மருத்துவமனையில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் கீழ்க்கண்ட மக்கள் நலப்பணிகளை தொடங்கி வைத்தார்.
1. திரவ மருத்துவ ஆக்சிஜன் கொள்கலன் திறந்து வைத்தார்.
2. மேம்படுத்தப்பட்ட 40 படுக்கைகள் கொண்ட சிறப்பு குழந்தைகள் கோவிட் தீவிர சிகிச்சை வார்டு மற்றும் 100 குழந்தைகள் கோவிட் வார்டு திறந்து வைத்தார்.
3. 50 ஆக்சிஜன் செறிவூட்டிகள், குழந்தைகள் வார்டுக்கு அர்ப்பணித்தார்.
4. பொதுமக்கள் உபயோகத்துக்காக கழிவறைகள் திறந்து வைத்தார்.
பூமி மற்றும் ஃப்ரெஷ்வொர்க்கர்ஸ் ஆகிய தன்னார்வ அமைப்புகள், திரவ ஆக்சிஜன் கொள்கலன் நிறுவுவதற்கும், மெட்ராஸ் பெர்டிலைசர் நிறுவனம் ஆக்சிஜன் ஜெனரேட்டர் நிறுவுவதற்கும் பெரிதும் உதவினார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.