தமிழகத்தில் ஒருவருக்கு உருமாறிய கொரோனா தொற்று இருப்பதாக சுகாதாரத்துறை செயலர் தகவல்.
பிரிட்டனில் உருமாறிய புதிய கொரோனா வைரஸ் பரவி வருவதால் இந்தியா – இங்கிலாந்து இடையேயான விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த நவம்பர் 25 முதல் டிசம்பர் 23 வரை பிரிட்டனிலிருந்து இந்தியா வந்த பயணிகளை கண்டறிந்து தனிமைப்படுத்தி கொரோனா பரிசோதனை மேற்கொள்ளபட்டு வருகிறது.
இதுவரை 33,000 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் அதில் 113 பேருக்கு கொரோனா உறுதியானது. இவர்களது சளி மாதிரி உள்ளிட்டவற்றை ஆய்வு செய்ததில் 6 பேருக்கு உருமாறிய புதிய கொரோனா பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ளது. இவர்கள் 6 பேரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், இவர்களோடு தொடர்பில் இருந்தவர்களையும் தனிமைப்படுத்தி சோதனை செய்யும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், பிரிட்டனில் இருந்து தமிழகம் வந்தவர்களில் இதுவரை 17 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் தமிழகத்தில் ஒருவருக்கு உருமாறிய கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.