கடலூரில் உள்ள கல்குணம் கிராமத்தில் கடந்த சில நாட்களாக நள்ளிரவில் திடீரென குடிசை வீடுகள், கடைகள் தீப்பற்றி எரியும் சம்பவங்கள் கிராம மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே உள்ள கல்குணம் கிராமத்தில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றன. கடந்த சில நாட்களாகவே கல்குணம் கிராமம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள குடிசை வீடுகள், வைக்கோல் போர்கள் நள்ளிரவில் திடீரென தீப்பிடித்து எரியும் சம்பவங்கள் தொடர் கதையாகியுள்ளது. இதுவரை 5 குடிசை வீடுகள், 3 வைக்கோல் போர்கள் தீக்கிரையாகியுள்ளது.
இதனால் கிராம மக்கள் பீதியில் ஆழ்ந்துள்ள நிலையில் தீ சம்பவங்களுக்கு மர்ம நபர்கள் காரணமா? என்பது குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கைகள் உள்ளது.
கல்குணம் கிராமத்திற்கு பக்கத்தில் உள்ள மீனாட்சிப்பேட்டையை சேர்ந்த சக்திவேல் என்பவர் கடலூர் - விருதாச்சலம் தேசிய நெடுஞ்சாலையில் ஓரத்தில் தள்ளுவண்டியில் பெட்டிக்கடை நடத்தி வந்துள்ளார். நேற்று இரவு வியாபாரம் முடிந்து அவர் கடையை பூட்டிவிட்டு சென்ற நிலையில் இரவு 11.30 மணி அளவில் அந்த தள்ளுவண்டி கடை திடீரென தீப்பிடித்துள்ளது.
அப்போது அந்த பக்கமாக வந்த கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் இதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். உடனடியாக அவர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்து தீயை அணைத்தார். மேலும் தொடர்ந்து வரும் இந்த தீ விபத்து சம்பவங்கள் குறித்து முறையான விசாரணையை நடத்த குறிஞ்சிப்பாடி போலீஸாருக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். இந்த தொடர் தீ சம்பவங்கள் அப்பகுதி மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது.
Edit by Prasanth.K