நேற்று மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் அஞ்சலியின் போது அவரது சமாதியில் உருக்கமான சம்பவம் ஒன்று நடந்தேறியுள்ளது.
மறைந்த முன்னாள் ஜெயலலிதா அவர்களின் 71 ஆவது பிறந்த நாள் நேற்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. அதிமுக மற்றும் அமமுக ஆகியக் கட்சிகளை சேர்ந்தவர்களும் ஜெயலலிதா சமாதியில் அவருக்கு நினைவஞ்சலில் செலுத்தினர். அதிமுக துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் சார்பில் அஞ்சலி செலுத்த வந்தவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இதையெல்லாம் மறக்க செய்யும் வகையில் ஜெயலலிதா சமாதியில் புதுமணத் தம்பதிகள் தாலிக் கட்டி தங்கள் திருமணத்தை செய்துகொண்டது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இதுகுறித்து விசாரித்த போது மணமகன் ஜெயதேவன் சென்னை 63-வது வட்ட அதிமுக பொருளாளரின் மகன், என்றும் 1990-ம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தில் இருந்த ஜெயலலிதாவே அவருக்கு ஜெயதேவன் என்ற பெயரை சூட்டியதாகவும் கூறியுள்ளார்.
மேலும் தனது கல்யாணம் அவரது தலைமையிலேயே நடக்க வேண்டும் என்று எண்ணியதாகவும் துரதிர்ஷ்டவசமாக அவர் இறந்து விட்டதால் அவரது சமாதியில் திருமணம் செய்துகொண்டதாகவும் கூறியுள்ளார். ஜெயதேவன் சுவாதி திருமணம் அவரது பெற்றோர்கள் ஆசியுடன் சிறப்பாக நடைபெற்றது. அஞ்சலி செலுத்த வந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மணமக்களுக்கு ஆசி வழங்கினர்.