தமிழகத்தில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு அரசு பொதுத்தேர்வு நடந்து வரும் நிலையில் அதில் ஆள்மாறாட்டம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்களுக்கு 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடந்து வருகின்றன. இந்த பொதுத்தேர்வில் பள்ளிகளில் நேரடியாக படிக்காத தனித்தேர்வர்களும் தேர்வு எழுதி வருகின்றனர்.
அவ்வாறாக நாகப்பட்டிணம் மாவட்டம் வெளிப்பாளையத்தில் உள்ள பள்ளியில் நேற்று ஆங்கில பாடத் தேர்வு நடந்த நிலையில், தேர்வுக்கு வந்த பெண் ஒருவர் முகக்கவசம் அணிந்தபடி தேர்வு எழுதியுள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த தேர்வு அறை கண்காணிப்பாளர், அந்த பெண்ணை முகக்கவசத்தை நீக்கும்படி சொல்லி சோதனை செய்துள்ளார்.
அவர் கொண்டு வந்திருந்த ஹால் டிக்கெட்டில் அவரது போட்டோவே இருந்தாலும், தேர்வு கண்காணிப்பாளர் வைத்திருந்த பதிவேட்டில் வேறு நபருடைய போட்டோ இருந்துள்ளது. இது தொடர்பாக அவர் மேல் அதிகாரிகளுக்கு தகவல் அளித்த நிலையில் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளும், காவல்துறையினரும் அந்த பெண்ணை அழைத்துச் சென்று விசாரித்துள்ளனர்.
செல்வாம்பிகை என்ற அந்த 25 வயது பெண் தனது தாயாருக்கு பதிலாக ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுத வந்ததை ஒப்புக்கொண்டுள்ளார். அதன்படி மேல் விசாரணைக்காக அந்த பெண்ணை போலீஸார் கைது செய்துள்ளனர். செல்வாம்பிகையின் தாய் சுகந்தி தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த நிலையில் மகள் எதற்காக தேர்வை எழுத ஆள்மாறாட்டம் செய்தார் என்று விசாரணை நடந்து வருகிறது.
Edit by Prasanth.K