மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மகள் என பெங்களூரை சேர்ந்த அம்ருதா என்பவர் கூறியுள்ள விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தன்னை ஜெ.வின் மகளாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி அம்ருதா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து பரபரப்பை உண்டாக்கியுள்ளார். மேலும், அதே பெங்களூரில் வசிக்கும் ஜெ.வின் அத்தை மகளான லலிதா என்பவரும் அம்ருதா கூற்றில் உண்மையிருக்கிறது எனக்கூறி பரபரப்பிற்கு வலு சேர்த்துள்ளார்.
ஜெயலலிதாவிற்கும், நடிகர் சோபன்பாபுவிற்கும் ஒரு பெண் குழந்தை பிறந்தது உண்மைதான். என்னுடைய உறவினர்தான் ஜெ.விற்கு பிரசவம் பார்த்தார். இதுபற்றி யாரிடமும் கூறக்கூடாது என ஜெயலலிதா சத்தியம் வாங்கிக்கொண்டார் என லலிதா கூறியிருந்தார்.
இந்நிலையில் ஜெ.வின் அண்ணன் மகள் தீபா, தர்மபுரியில் நடைபெற்ற ஒரு விழாவில் கலந்து கொள்ள வந்தபோது, இதுபற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த தீபா “எனது அத்தை ஜெயலலிதாவிற்கு மகள் என யாரும் கிடையாது. அம்ருதாவை பின்னால் இருந்து யாரோ இயக்குகிறார்கள்” என பதிலளித்தார்.
மேலும், ஜெ.வின் மகள் என விளம்பரம் தேடிக்கொள்ளவே அம்ருதா என்பவர் இதையனைத்தும் செய்து கொண்டிருக்கிறார். சந்தியா ஜெயராம் தம்பதிக்கு ஜெயகுமார், ஜெயலலிதா என்ற இரண்டு பேர் மட்டுமே சட்டப்பூர்வமான வாரிசு. வேறு யாரும் உரிமை கோரினால் அவர்கள் கண்டிப்பாக போலியானவர்கள்தான்” என அவர் தெரிவித்தார்.